
மூன்று நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்கு சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவு செய்தன. ஆசிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தாமதம், முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியது. எனினும், ஏற்றுமதியை குறைவாக சார்ந்திருப்பதால், அமெரிக்க வரி விதிப்பின் பாதகமான விளைவுகள், உலகளாவிய வர்த்தக சவால்களை இந்தியா திறம்பட எதிர்கொள்ளும் என மூடிஸ் அமைப்பு தன் கணிப்பில் தெரிவித்து இருந்தது.
இதனால் உற்சாகமடைந்த முதலீட்டாளர்கள், வங்கி துறை பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால், வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 835 புள்ளிகள் வரை உயர்வு கண்டு பின்னர் சரிந்து, 410 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. தொடர்ச்சியாக, மூன்று நாட்கள் சந்தை குறியீடுகள் கண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
சரிவுக்கு காரணங்கள்
1 இந்திய பொருளாதாரம் குறித்த மூடிஸ் கணிப்பு முடிவுகள்
2 ஆசிய பங்கு சந்தைகளில் காணப்பட்ட சாதகமான போக்கு
3 வங்கி துறை பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம்.
உலக சந்தைகள்
செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. ஜப்பானின் நிக்கி சரிவுடன் நிறைவு செய்தது. தென் கொரியாவின் கோஸ்பி ஹாங்காங்கின் ஹாங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடன் வர்த்தகமாகின. ஐரோப்பிய சந்தைகளும் சரிவுடன் நிறைவடைந்தன.
உயர்வு கண்ட பங்குகள் -- நிப்டி
பாரத் எலக்ட்ரானிக்ஸ் 5.26%
டாடா ஸ்டீல் 1.93%
சிப்லா 1.83%
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 2,202 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.19 சதவீதம் உயர்ந்து, 66.16 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா குறைந்து, 85.59 ரூபாயாக இருந்தது.