/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தமிழகத்தின் 6 மாத ஏற்றுமதி ரூ.2.25 லட்சம் கோடியை தாண்டியது காஞ்சிபுரத்தின் பங்கு மட்டும் ரூ.1 லட்சம் கோடி

ADDED : நவ 21, 2025 12:10 AM

சென்னை:தமிழக ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் ஏப்., முதல் செப்., வரையிலான ஆறு மாதங்களில், 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 1.97 கோடி ரூபாயாக இருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடம் பிடித்தது. சென்னை, 32,422 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. திருப்பூர், 21,328 கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் மூன்றாவது இடம் வகிக்கிறது.
நம் நாட்டில் செயல்பாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் அதிக அளவாக, 31,517 ஆலைகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வாகன உற்பத்தி ஆலைகளும், திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஜவுளி ஆலைகளும் அதிகளவில் உள்ளன.
மோட்டார் வாகனம், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. அவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை உள்நாட்டு சந்தையில் விற்பதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.
இதுகுறித்து, எப்.ஐ.இ.ஓ., எனப்படும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டின் ஏற்றுமதியில் குஜராத், மஹாராஷ்டிராவுக்கு அடுத்து, தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏப்., முதல் செப்., வரை குஜராத் ஏற்றுமதி, 4.93 லட்சம் கோடி ரூபாயாகவும், மஹாராஷ்டிரா ஏற்றுமதி, 2.75 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளன. கடந்த ஆண்டின் இதே காலத்தில் குஜராத் ஏற்றுமதி, 5.32 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மஹாராஷ்டிரா ஏற்றுமதி, மாற்றமின்றி 2.75 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.