/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கம்பெனி பெயரில் கடன் வாங்கி சுகபோகம் புளூஸ்மார்ட் நிறுவனத்தை பஞ்சராக்கிய உரிமையாளர்கள்
/
கம்பெனி பெயரில் கடன் வாங்கி சுகபோகம் புளூஸ்மார்ட் நிறுவனத்தை பஞ்சராக்கிய உரிமையாளர்கள்
கம்பெனி பெயரில் கடன் வாங்கி சுகபோகம் புளூஸ்மார்ட் நிறுவனத்தை பஞ்சராக்கிய உரிமையாளர்கள்
கம்பெனி பெயரில் கடன் வாங்கி சுகபோகம் புளூஸ்மார்ட் நிறுவனத்தை பஞ்சராக்கிய உரிமையாளர்கள்
ADDED : ஏப் 20, 2025 12:45 AM

நிறுவனத்தின் வளர்ச்சிக்காக திரட்டிய பணத்தை, சொந்த சுகபோகத்துக்கு செலவிட்ட உரிமையாளர்களால், வீழ்ச்சி கண்டிருக்கிறது, ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம்.
சூரிய மின்சக்தி ஆலோசனை, பொறியியல், கொள்முதல் மற்றும் பசுமை எரிசக்தி கட்டுமான சேவைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஜென்சால் இன்ஜினியரிங். இதன் நிறுவனர்கள் அன்மோல் சிங் ஜக்கி, புனீத் சிங் ஜக்கி. இருவரும் சகோதரர்கள். இவர்கள் துவக்கிய இன்னொரு நிறுவனமான, 'புளூஸ்மார்ட் மொபிலிட்டி' மின்சார டாக்சி சேவையில் ஈடுபட்டு வருகிறது.
புளூஸ்மார்ட் மின்சார வாகன வணிகம் குறைந்த காலகட்டத்திலேயே வேகமெடுத்து, டில்லி, மும்பை, பெங்களூரு என விரிந்தது. ஆனால், சகோதரர்களின் நிதி முறைகேடுகளால், இன்று பஞ்சராகி நிற்கிறது.
என்ன நடந்தது?
கடந்த 2024 ஜூனில், ஜென்சால் பங்கு விலை மோசடியாக அதிகரிக்கப்படுவதாக வந்த புகாரை, 'செபி' விசாரிக்கத் துவங்கியது. பங்கு விலையில் தகிடுதத்தங்கள், நிதி முறைகேடு போன்ற விஷயங்கள் செபி விசாரணையில் தெரியவர, இதன் தொடர்ச்சியாக, சகோதரர்களுக்கு சந்தையில் தடைவிதித்தது செபி. கடன் தரவரிசை நிறுவனங்கள் கேர், இக்ரா ஆகியவை, நிறுவனம் குறித்த தங்கள் மதிப்பீட்டை குறைத்து அறிவித்தன. இதையடுத்து, ஜென்சால் இன்ஜினியரிங் பங்குகள் விலை அதலபாதாளத்துக்கு செல்ல, டில்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் கோலோச்சிய புளூஸ்மார்ட் மின்சார வாகன டாக்சி சேவை, வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டு விட்டது.
மோசடி
கடந்த 2022 முதல் 2024 வரை, 664 கோடி ரூபாய்க்கு 6,400 மின்சார வாகனங்கள் வாங்கப்போவதாக பவர் பைனான்ஸ் நிறுவனத்திடம், 978 கோடி ரூபாய் கடன் பெற்றது ஜென்சால் நிறுவனம்.
ஆனால், சப்ளையரான கோ - ஆட்டோவிடம் 568 கோடி ரூபாய்க்கு 4,704 வாகனங்களை மட்டுமே வாங்கியது விசாரணையில் தெரிந்தது. மீதித்தொகையில் பெரும்பகுதியை, தனிப்பட்ட செலவுக்கு ஜக்கி சகோதரர்கள் திருப்பி விட்டிருந்தனர்.
குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்குதல், உறவினர்களுக்கு பணம் பரிமாற்றம், தங்கள் குடும்பத்தின் வேறு நிறுவனங்களில் முதலீடு என அள்ளி விட்டிருந்தனர்.
பாதிப்புக்கு ஆளானோர்
தற்போது செபி நடவடிக்கையால், ஜக்கி சகோதரர்கள் பதவி விலகியுள்ளனர். புளூஸ்மார்ட் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், டில்லி, மும்பை, பெங்களூரில் இதன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கார் ஓட்டுநர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். முதலீடு செய்தவர்கள், பணம் என்ன ஆகும் என்ற பரிதவிப்பில் உள்ளனர்.
கடனாகப் பெற்ற பணத்தில், நிறுவனத்தைப் பற்றியோ, பங்குதாரர்கள் நலன் பற்றியோ எந்த கவலையுமின்றி ராஜ வாழ்க்கை வாழ்ந்த ஜக்கி சகோதரர்களின் லக்கி, செபியின் நடவடிக்கையால் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
மீண்டும் ஓடுமா?
புளூஸ்மார்ட் கார் சேவை பாதிப்பில் இருந்து வாடிக்கையாளர்களை காக்க, ஜென்சால் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பவர் பைனான்ஸ், ஐ.ஆர்.இ.டி.ஏ., ஆகியவை பேச்சு நடத்தின. கார் சேவையை தொடர்ந்து நடத்த தன்னை அனுமதிக்குமாறு பவர் பைனான்ஸ் நிறுவனத்திடம்  ஐ.ஆர்.இ.டி.ஏ., கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புளூஸ்மார்ட்
துவக்கம்	:	2019 ஜனவரி 14
நிறுவனர்கள்	:	அன்மோல் சிங் ஜக்கி, 			புனீத் சிங் ஜக்கி.
தலைமையகம்	:	குருகிராம்
முக்கிய சந்தைகள்	:	டில்லி, மும்பை, 			பெங்களூரு, துபாய்
சிறப்பு	:	இந்தியாவின் முதல்			மாசற்ற வாகன சேவை
எண்ணிக்கை	:	8,500 மின்சார கார்கள்
ஓட்டுநர்கள்	:	10,000க்கும் மேற்பட்டோர்
வளர்ச்சியும், வீழ்ச்சியும்
	பி.எஸ்.இ., - எஸ்,எம்,இ., பிரிவில்  2019 அக்டோபரில் பட்டியலிடப்பட்டது
	பிரதான பங்குகள் பட்டியலில், 2023 ஜூலையில் இடம் பிடித்தது
	2017ல் 61 கோடியாக இருந்த விற்பனை, 2024ல் 1,152 கோடி ரூபாயானது.
	நிகர லாபம் 2 கோடியில் இருந்து 80 கோடியானது.
	மொத்த வர்த்தக மதிப்பு 2,202 கோடியை எட்டியது.
	பட்டியலிடும்போது 155 ஆக இருந்த பங்குதாரர்கள் எண்ணிக்கை,  2025 மார்ச்சில் 1.10 லட்சம் ஆனது.
	ஒரு பங்கின் விலை கடந்த ஆண்டு 1,126ஐ தொட்டு, சந்தை மதிப்பு ரூ.4,300 கோடியாக எகிறியது.
	கடந்த 11ம் தேதி, பங்கின் விலை 133 ரூபாயாகி, சந்தை மதிப்பு 506 கோடியாக வீழ்ந்தது.
முதலீடு செய்த பிரபலங்கள்
எம்.எஸ்.தோனி - கிரிக்கெட் வீரர்
தீபிகா படுகோனே - பிரபல திரை நட்சத்திரம்
சஞ்சீவ் பஜாஜ் - பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்
சுமந்த் சின்ஹா - ரினியூ பவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
அஷ்னீல் குரோவர் - பாரத் பே நிறுவனத்தின் நிறுவனர்

