
14வது வாரமாக தொடரும் பங்கு விற்பனை
அன்னிய முதலீட்டாளர்கள் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 30,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பங்குகளை விற்று, தங்கள் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர். இத்துடன் நடப்பாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள், பங்கு முதலீட்டில் இருந்து திரும்ப பெற்ற தொகை 1.42 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் 1.33 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து 57.16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முந்தைய வாரத்தில் ஒட்டுமொத்த இருப்பு 15,495 கோடி ரூபாய் குறைந்து 55.57 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
ஆப்பிள் ஏர்பாட் இந்தியாவில் உற்பத்தி
வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஹைதராபாதில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் ஏற்றுமதிக்கான 'ஆப்பிள் ஏர்பாட்' உற்பத்தியை துவங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபோன்களுக்கு பின் ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தி செய்யத் துவங்கும் இரண்டாவது தயாரிப்பு இந்த ஏர்பாட்கள் ஆகும்.
சர்க்கரை உற்பத்தி சரிகிறது
நடப்பு 2024 - 25 பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 16.13 சதவீதம் குறைந்து 23.71 மில்லியன் டன்னாக இருக்கும் என தேசிய கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் கணிக்கப்பட்டதை விட உற்பத்தி கணிசமாக குறையு மென்பதால், கூட்டமைப்பு தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.