
ஜி.எஸ்.டி., குறைப்பு தொடர்பாக இதுவரை 3,000 புகார்கள்
ஜி.எஸ்.டி., குறைப்பு அமலுக்கு வந்தததில் இருந்து, தேசிய நுகர்வோர் உதவி எண் வாயிலாக இதுவரை 3,000 புகார்கள் வந்துள்ளதாக மத்திய நுகர்வோர் நலத்துறை செயலர் நிதி காரே தெரிவித்துள்ளார். மேலும், புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரியத்துக்கு அனுப்பி வருவதாகவும், ஜி.எஸ்.டி., குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காமல், தவறாக வழிநடத்தும் தள்ளுபடி நடைமுறையால், நுகர்வோர் எங்கு, எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அரசு கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதானிக்கு சொத்துக்களை விற்க அனுமதி கேட்டு சஹாரா மனு
அதானி பிராப்பர்டீஸ் நிறுவனத்துக்கு சொத்துக்களை விற்க அனுமதி கேட்டு, சஹாரா இந்தியா கமர்ஷியல் பிராப்பர்டீஸ் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. மஹாராஷ்டிராவின் அம்பி பள்ளதாக்கு, உ.பி.,யின் லக்னோ உள்பட சொத்துக்களை விற்பது தொடர்பாக, கடந்த செப்.,6ல் அதானி பிராப்பர்டீஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாகவும் இது சொத்துக்களின் மதிப்பை அதிகப்படுத்துவதுடன், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்துவதை விரைவுபடுத்தும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளது. இந்த மனு, அக்., 14 விசாரணைக்கு வர உள்ளது.
ஆர்.பி.ஐ., துணை கவர்னராக
சிரிஷ் சந்திரா முர்மு நியமனம்
ஆர்.பி.ஐ., துணை கவர்னராக சிரிஷ் சந்திரா முர்முவை மத்திய அரசு நியமித்து உள்ளது. துணை கவர்னராக உள்ள ராஜேஸ்வர் ராவ் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, தற்போது செயல் இயக்குநராக பணியாற்றி வரும் சிரிஷ் சந்திரா முர்மு, அக்.9 முதல் 3 ஆண்டுகள் வரை இப்பதவியில்இருப்பார். வங்கி விதிமுறைகள், மேற்பார்வை மற்றும் பணக்கொள்கை, நிதிச்சந்தை ஒழுங்குமுறை ஆகிய முக்கிய துறைகளை கவனிக்க உள்ளார்.