
இந்திய முதலீட்டாளர்களுக்கு ஆப்கனில் 5 ஆண்டு வரி விலக்கு
தங்கச் சுரங்கம் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்ய முன்வரும் இந்திய முதலீட்டாளர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை வரி விலக்கு வழங்க உள்ளதாக, ஆப்கானிஸ்தான் வர்த்தகத்துறை அமைச்சர் அல்ஹாஜ் நுாருதீன் அஸிஸி தெரிவித்துள்ளார்.
அசோசெம் தொழில் கூட்டமைப்பினரிடையே பேசிய அவர், ஆப்கனில் பெரிய போட்டியாளர்கள் இல்லை என கூறினார். வரிச் சலுகைகள் வழங்குவதோடு, தொழில் துவங்க இலவசமாக நிலம் வழங்கவும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜியோ, வோடபோனுக்கு ஆப்பிள், அமேசான் எதிர்ப்பு
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் 6 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைக்கு, ஆப்பிள், அமேசான், மெட்டா உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜியோ மற்றும் வி.ஐ., நிறுவனங்கள் 6 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 5ஜி, 6ஜி மொபைல் சேவைக்கு ஏலம் விடக் கோருகின்றன. ஆனால், வைபை சேவைக்கு மட்டுமே இதை முழுதுமாக ஒதுக்க வேண்டும் என, முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
மசாலா பொருட்கள் ஏற்றுமதி புதிய சந்தைகளில் கவனம் தேவை
இந்திய மசாலா பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வெகு சில சந்தைகளை மட்டுமே நம்பியில்லாமல், புதிய சந்தைகளின் பக்கம் கவனத்தை திருப்ப வேண்டும் என, உலக மசாலா பொருட்கள் கழகத்தின் தலைவர் ராம் குமார் மேனன் தெரிவித்துள்ளார். ரஷ்யா, ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராய்ந்து, வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும் என அவர் கூறினார்.

