/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: காப்பீடுக்கு பணம் கட்டுவதை நிறுத்திவிட்டு தங்கம் வாங்கலாமா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: காப்பீடுக்கு பணம் கட்டுவதை நிறுத்திவிட்டு தங்கம் வாங்கலாமா?
ஆயிரம் சந்தேகங்கள்: காப்பீடுக்கு பணம் கட்டுவதை நிறுத்திவிட்டு தங்கம் வாங்கலாமா?
ஆயிரம் சந்தேகங்கள்: காப்பீடுக்கு பணம் கட்டுவதை நிறுத்திவிட்டு தங்கம் வாங்கலாமா?
ADDED : நவ 11, 2024 01:14 AM

என் நிறுவனம் ஐ.பி.ஓ., வர விரும்புகிறேன். அதற்கான வழிமுறை மற்றும் தகுதிகள் என்ன?
சிவகுமார் ராஜேந்திரன்,
கோயம்புத்துார்.
பங்குச் சந்தையில் பட்டியல் இடப்படுவதற்கு நிறைய அடிப்படை விதிமுறைகளும், தேவைகளும் உள்ளன. அவற்றை இந்தக் கேள்வி - பதில் பகுதியில் சொல்லி முடிக்க முடியாது. உங்கள் நிறுவனத்தின் ஆடிட்டர்களை கலந்தாலோசியுங்கள். அவர்கள் வழி சொல்லித் தருவர்.
நான் உண்மையான சொத்துக்களில் மட்டுமே கவனம் செலுத்துபவன் என்று அண்மையில் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். பங்குச் சந்தையில் பங்கு வாங்குவது, மியூச்சுவல் பண்டு முதலீடுகள் உண்மையான சொத்துக்களாக கருதப்படுமா?
ஆர்.கவுதம், பழனி.
நிச்சயம் கருதப்படும். நிலமும், வீடும், தங்கமும் தான் ஒரு காலத்தில் உண்மையான சொத்துக்களாக கருதப்பட்டன. ஆனால், இன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு முதலீடுகளும் அவற்றோடு சேர்ந்துவிட்டன. கடந்த 20 ஆண்டுகளில், பங்குகளில் செய்யப்பட்ட முதலீடு, ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 16 சதவீத ரிட்டர்னை ஈட்டித் தந்திருக்கின்றன.
பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு, பல முன்னணி நிறுவனங்கள் இங்கே காலுான்றி நின்று, வளமான சொத்துக்களை உருவாக்கியுள்ளன. தரமான நிறுவனங்களின் பங்குகள் சோடை போனதே இல்லை. கல்லும், மண்ணும், தங்கமும், வைரமுமாக இருந்தால் தான் சொத்துக்கள் என்று அர்த்தமில்லை. டீமேட் வடிவிலும் சொத்துக்கள் இருக்கலாம்.
கடந்த வாரம் தனியார் மருத்துவமனை ஒன்றில் குடல் இறக்க ஆப்பரேஷன் செய்துகொண்டேன். அந்த மருத்துவமனையில் என் 'ஆயுஷ்மான் பாரத்' அட்டையைக் காண்பித்தேன். அவர்கள், இந்தத் திட்டத்தில் இணையவில்லை என்று சொல்லிவிட்டனர். கையில் இருந்து பணம் கட்டினேன். இந்தப் பணத்தைத் திரும்ப பெறமுடியுமா?
என். சுப்பிரமணியன்,
திருவள்ளூர்.
முடியாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேராத மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக் கொண்டால், அதற்கான கட்டிய பணத்தைத் திரும்பப் பெறும் 'ரீ இம்பர்ஸ்மென்ட்' வசதி இல்லை என்று பார்லிமென்டிலேயே சுகாதாரத் துறை இணை அமைச்சர் தெரிவித்துஉள்ளார்.
என்னிடம் பல காப்பீடு பாலிசிகள் உள்ளன. தற்போது தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால் பாலிசிக்கு செலுத்தும் பணத்தை நிறுத்தி விட்டு, அந்த பணத்தில் தங்கத்தை வாங்கலாமா? பணம் செலுத்துவதை நிறுத்தினால், பாலிசியில் கிடைக்கும் பலன்கள் என்னவாகும்?
எம்.ரவி, கிருஷ்ணகிரி.
இரண்டும் இருவேறு வகைகள். பாலிசி எடுப்பது என்பது காப்பீடு. தங்கம் வாங்குவது என்பது முதலீடு. காப்பீடையும், முதலீட்டையும் எப்படி ஒப்பிட முடியும்? காப்பீடு, வருவாய் ஈட்டுவதற்கான வகை இல்லை.
அது, உங்களுடைய குடும்பத்துக்கு நீங்கள் செய்துவைக்கும் பாதுகாப்பு ஏற்பாடு. அதனுடைய நோக்கமே வேறு.
ஒன்றை நிறுத்திவிட்டு இன்னொன்றில் முதலீடு செய்வது சரியான அணுகுமுறை இல்லை என்பது என் அபிப்பிராயம்.
ஒன்றைவிட இன்னொன்று பெட்டராகத் தெரியலாம். ஆனால், அது உண்மையாக இராது. என்னென்ன பாலிசி திட்டத்தில் பணம் போடுகிறீர்கள் என்று தாங்கள் குறிப்பிடவில்லை.
ஒவ்வொரு பாலிசி திட்டத்திலும் குறிப்பிட்ட காலம் வரை பிரீமியம் செலுத்த வேண்டும். கட்டாமல் போனால், என்னென்ன சலுகைகளை இழக்க நேரிடும் என்றெல்லாம் விரிவான வழிமுறைகள் உள்ளன.
காப்பீடு முகவரிடம் உங்கள் பாலிசி விபரங்களை கொடுத்து, போனஸ் உள்ளிட்டவற்றில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்று விசாரித்துக் கொள்ளுங்கள். இழப்பு அதிகமாக இருக்குமானால், பிரீமியம் கட்டுவதை நிறுத்தாதீர்கள்.
டி.டி.பி., வசதியோடு, ஒரு பிரவுசிங் மையம் துவங்க திட்டம். எப்படி அனுமதி பெறுவது?
டி.நந்தகுமார், அருப்புக்கோட்டை.
டி.டி.பி., வசதியோடு கடை துவங்குவதற்கு 'டிரேட் லைசென்ஸ்' வாங்கினால் போதும். உங்கள் அருப்புக்கோட்டை நகராட்சியிலேயே இதற்கு வழிகாட்டுவர். ஆனால், பிரவுசிங் மையம் துவங்குவதற்கு, காவல் துறை அனுமதி வேண்டும் என்று நினைக்கிறேன். உள்ளூர் காவல்துறையில் விசாரித்துப் பாருங்கள்.
பங்குச் சந்தை சரிவில் இருக்கிறதே? மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி.,யை தொடரலாமா அல்லது நிறுத்திவிடலாமா?
நேகா சரவணன், சென்னை.
நீங்கள் இப்போது தான் தொடர்ந்து எஸ்.ஐ.பி., வாயிலாக முதலீடு செய்யவேண்டும். உங்கள் பண்டு திட்ட யூனிட்டின் என்.ஏ.வி., குறைவாக இருக்கும்.
நீங்கள் வழக்கமாக முதலீடு செய்யும் தொகைக்கு கூடுதல் யூனிட்டுகள் கிடைக்கும். எஸ்.ஐ.பி.,யின் அழகே இது தான்.
சந்தை உயர்கிறதோ, தாழ்கிறதோ, சீராக ஒரு தொகையை தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது, உங்களுடைய யூனிட்டுகள் அதற்கேற்ப கணிசமாக உயர்ந்திருக்கும். ஐந்து அல்லது ஏழு ஆண்டுகள் முடிவில், உங்கள் முதலீடு பன்மடங்கு பெருகுவதற்கான வாய்ப்பு இது.
உங்களால் பணமே கட்டமுடியவில்லை, பொருளாதார இழப்பு, வேலை இழப்பு, நோய் தாக்கம் என்றெல்லாம் ஏதேனும் நியாயமான காரணம் இருக்குமானால், எஸ்.ஐ.பி.,யை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாம். மற்றபடி, நீங்கள் எஸ்.ஐ.பி.,யைத் தொடர்வதே எதிர்காலத்துக்கு நல்லது.
அருமையான மதிப்பெண்கள் பெற்று, நல்ல கல்வி வாய்ப்பு கிடைத்தும், உரிய நேரத்தில் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கு வழிகாட்ட முடியுமா?
செ.செல்வக்கோ பெருமாள்,
காஞ்சிபுரம்.
இத்தகைய மாணவர்களுக்கு உதவுவதற்காகவே 'வித்யாலட்சுமி திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஏழு ஆண்டுகளில், 22 லட்சம் மாணவர்களுடைய உயர் கல்வி பயிலும் கனவை நனவாக்குவதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுஉள்ளது.
பிணை இல்லாமல்; உத்தரவாதம் இல்லாமல் கொடுக்கப்படும் கல்விக் கடன் இது. குடும்ப வருவாய் 8 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு, இந்த திட்டத்தில் கல்விக் கடன் கிடைக்கும்.
வட்டி மானியம் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன. மனு செய்வது முதற்கொண்டு அனைத்துமே ஆன்லைனிலேயே நடைபெறுகின்றன. இந்த திட்டத்துக்கு, 3,600 கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒதுக்கியுள்ளது. இணையதளமும் பி.எம்.வித்யாலட்சுமி என மேம்படுத்தப்பட உள்ளது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
.p:h98410 53881