/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள் : வீடு கட்ட ப்ரீ இ.எம்.ஐ., வசதியை பயன்படுத்தலாமா?
/
ஆயிரம் சந்தேகங்கள் : வீடு கட்ட ப்ரீ இ.எம்.ஐ., வசதியை பயன்படுத்தலாமா?
ஆயிரம் சந்தேகங்கள் : வீடு கட்ட ப்ரீ இ.எம்.ஐ., வசதியை பயன்படுத்தலாமா?
ஆயிரம் சந்தேகங்கள் : வீடு கட்ட ப்ரீ இ.எம்.ஐ., வசதியை பயன்படுத்தலாமா?
ADDED : மார் 17, 2025 12:40 AM

ஒரு பொதுத்துறை வங்கியில், என் தாத்தாவின் வைப்பு நிதியை, கடந்த ஆண்டு நவம்பரில் ஓராண்டுக்குப் புதுப்பித்தேன். அதன் பின்னர், அவரது வங்கிக் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படவில்லை. விசாரித்தபோது, வங்கிக் கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளது என்றனர். உரிய கே.ஒ.சி. விபரங்களைக் கொடுத்துவிட்டோம். கடந்த மூன்று மாதங்களாக வட்டி கிடைக்கவில்லை. கணக்கை வேறு கிளைக்கும் மாற்றிவிட்டனர். என்ன செய்வது?
பி.விமலா, சாத்துார்
வங்கி மேலாளரை அணுகி பிரச்னை என்னவென்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவரால் தீர்த்து வைக்க முடியவில்லை எனில், அந்த வங்கியின் நோடல் அலுவலருக்கு கடிதம் எழுதிக் கேளுங்கள். கே.ஒ.சி. விபரங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்று பாருங்கள். செய்யப்பட்டிருந்தால், எந்தச் சிக்கலும் இல்லாமல் வட்டி வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அப்படியும் பிரச்னை தீரவில்லை என்றால், அந்த வங்கி நடத்தக் கூடிய குறைதீர் கூட்டத்தில் போய் நடவடிக்கை எடுக்கச் சொல்லி கேளுங்கள். எங்கே சிக்கல் என்பதை வங்கி தான் தெரிவிக்க முடியும்.
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன். அதன் எதிர்காலம் எப்படி இருக்கும்? நம் நாட்டில் இதன் நிலை என்ன?
கிருஷ்ணமூர்த்தி, சென்னை
நான் வேண்டாம் என்று சொன்னாலும் நீங்கள் அதைக் கேட்கப் போவதில்லை. கிரிப்டோ முதலீட்டுக்கு தாங்கள் தயாராகிவிட்டீர்கள். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்.
இந்த விஷயத்தில் நான் அவநம்பிக்கைவாதி என்பதால் என் கருத்தை ஏற்கவேண்டும் என்று அவசியமில்லை. ஒரே ஒரு ஆலோசனை மட்டுமே கொடுக்க விரும்புகிறேன்.
கிரிப்டோவில் முதலீடு செய்வது எப்படி என்பதை நீங்களே கற்றுக்கொண்டு, அதன் கஷ்ட, நஷ்டங்களை உணர்ந்துகொண்டு அதில் ஈடுபடுங்கள். யாரோ சொன்னார்கள், எம்.எல்.எம். திட்டத்தில் சேரச் சொல்கிறார்கள் என்றெல்லாம் போய் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
கட்டடம் கட்டும்வரை ப்ரீ இ.எம்.ஐ. என்றொரு வாய்ப்பை வங்கிகள் தருகின்றனவே. இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாமா?
அவ்யந்த் பார்த்தசாரதி, வாட்ஸாப்
கட்டடம் எழும்போது, ஒவ்வொரு கட்டத்திலும் வங்கி, பகுதி பகுதியாக பணம் கொடுக்கும். அந்தச் சமயத்தில், அந்தத் தொகைக்குச் செலுத்தவேண்டிய வட்டியைத் தான் ப்ரீ இ.எம்.ஐ. என்று அழைக்கின்றனர். முழு இ.எம்.ஐ. என்றால், அசலையும் வட்டியையும் சேர்த்துக் கட்டுவீர்கள். குடித்தனம் வரும்வரை, முழு இ.எம்.ஐ.க்குப் போகவேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு இது வசதி.
ஆனால், ப்ரீ இ.எம்.ஐ. தவணை ஒன்றும் குறைவாக இருக்காது. அதுவும் நீங்கள் வாங்கும் தொகைக்கு ஏற்பவே இருக்கும். ஒரு சின்ன சவுகரியம் என்னவென்றால், வீட்டு வாடகையும் கொடுத்துக்கொண்டு, முழு வீட்டுக் கடன் தவணைத் தொகையையும் செலுத்துவதற்கு வசதி இல்லாதவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வைப்பு நிதிக்கான காப்பீட்டுத் தொகை 10 லட்சமாக உயர்த்தப்படும் என்று சொல்லப்படுகிறதே?
வெ.ஆனந்த், சென்னை
மும்பையைச் சேர்ந்த ஒரு கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிதி மோசடிக்குப் பிறகு, இந்தக் குரல் எழுந்துள்ளது. வைப்புநிதி காப்பீடு, கடன் உத்தரவாத கழகம், காப்பீட்டுத் தொகையை உயர்த்துவதற்கான முன்மொழிவை மத்திய அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கக் கூடும் என்று நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதுவரை அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட்டது போன்று தெரியவில்லை. 'நோய் நாடி, நோய் முதல் நாடி' என்றொரு குறள் உண்டு. பிரச்னைக்குரிய வங்கித் துறை நிர்வாகங்களைச் சீர் செய்யும் விஷயத்திலும் மத்திய அரசு வள்ளுவன் வாக்கைக் கேட்பது நல்லது.
சீராக மின்சார பில், மொபைல் போன் பில் கட்டவில்லை என்றால், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும் என்கின்றனரே, உண்மையா?
ஜி.வி.எஸ். கிரி, திருப்பூர்.
பொதுவாக இந்த மாதிரி வழக்கமான பில்களின் விபரங்கள், கிரெடிட் ஏஜன்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படாது. ஆனால், ஒருவேளை இந்த பில்களில் உள்ள தொகை கணிசமான அளவு உயர்ந்திருந்து, அதை ஒருவர் செலுத்தாமல் போயிருந்தால், அப்போது, கிரெடிட் ஏஜன்சிகளுக்குத் தெரிவிக்கப்படலாம்.
கிரெடிட் கார்டு விபரங்கள் கண்டிப்பாக தெரிவிக்கப்படும். பொதுவாக, எந்த பில்லையும் காலந்தாழ்த்தி கட்டவேண்டாம். அமெரிக்கா மாதிரி, கிரெடிட் ஸ்கோர் என்பது நம்மை ஆட்டு விக்கும் வல்லமை படைத்த ஆயுதம் ஆகிக்கொண்டு இருப்பதால், உஷாராக இருப்பது நல்லது.
எஸ்.ஐ.எப்., என்ற புதிய முதலீட்டு வகை அறிமுகமாகிஉள்ளதாமே? அதில் முதலீடு செய்யலாமா?
எஸ்.தேவராஜன், சேலம்
'ஸ்பெஷலைஸ்டு இன்வெஸ்ட்மென்ட் பண்டு' எனப்படும் சிறப்பு முதலீட்டு திட்டத்தை 'செபி' அறிமுகம் செய்துள்ளது. பெரு முதலீட்டாளர்கள், போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ் எனப்படும் பி.எம்.எஸ். திட்டத்தின் வாயிலாக முதலீடு செய்வர். அதற்கு குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும்.
சிறு முதலீட்டாளர்களோ, தாங்களே படித்து தெரிந்துகொண்டு பல்வேறு மியூச்சுவல் பண்டு திட்டங்களில் பணத்தைப் போடுவர்.
இந்த இரு வகைகளுக்கு இடையே உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்த எஸ்.ஐ.எப். எனும் முதலீட்டு வகை. இதில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய வேண்டும். அதேசமயம், இந்தப் பண்டைத் தேர்ந்த நிதி மேலாளர்கள் நிர்வகித்து, வருவாயை உருவாக்கித் தருவர்.
கருத்தளவில் சமீபத்தில்தான் 'செபி' இந்த முதலீட்டு வகைக்கு அனுமதி வழங்கியுள்ளது. எந்த மியூச்சுவல் பண்டு நிறுவனமும் இந்த வகையில் புதிய திட்டம் எதையும் அறிமுகம் செய்தாற்போல் தெரியவில்லை.
வங்கிகளின் வைப்புநிதிக்குப் பிரச்னை ஏற்பட்டால், வைப்பு நிதிக் காப்பீடு இருப்பது போல், காப்பீட்டு நிறுவனங்களில் பிரச்னை ஏற்பட்டால் யாரை அணுகுவது?
டி.பிரமீளா லோகநாதன், மின்னஞ்சல்
அதற்குத் தான் ஐ.ஆர்.டி.ஏ.ஐ. எனப்படும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இருக்கிறது. எந்த ஒரு காப்பீட்டு நிறுவனமும் மூழ்கிப் போகாமல் தடுக்கும் வழிமுறைகளை அது வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதற்கு 'சால்வன்சி விகிதம்' என்று பெயர்.
அதாவது, ஒரு காப்பீடு நிறுவனம், தன் கடமைகளைச் செய்வதற்குப் போதுமான மூலதனத்தை வைத்துஉள்ளதா என்பதைக் கணக்கிடுவதே சால்வன்சி விகிதம். ஐ.ஆர்.டி.ஏ.ஐ. இதனை 150 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
ஜூன் 2024 முடிய உள்ள சால்வன்சி விகித விபரங்கள் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டன. அதன்படி, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் சால்வன்சி விகிதம் 202 சதவீதம்; பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் சால்வன்சி விகிதம் 167 சதவீதம்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph:98410 53881