sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

ஆயிரம் சந்தேகங்கள் : பெட்ரோல் பங்க் அமைக்க எவ்வளவு செலவாகும்?

/

ஆயிரம் சந்தேகங்கள் : பெட்ரோல் பங்க் அமைக்க எவ்வளவு செலவாகும்?

ஆயிரம் சந்தேகங்கள் : பெட்ரோல் பங்க் அமைக்க எவ்வளவு செலவாகும்?

ஆயிரம் சந்தேகங்கள் : பெட்ரோல் பங்க் அமைக்க எவ்வளவு செலவாகும்?


ADDED : அக் 07, 2024 12:36 AM

Google News

ADDED : அக் 07, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரண்டு பொதுத்துறை வங்கிகளில் எனக்கு மொத்தம் 4.60 லட்சம் ரூபாய் 'பர்சனல் லோன்' பாக்கி உள்ளது. இப்போது எனக்கு பிரதம மந்திரியின் 'முத்ரா லோன்' திட்டத்தில் 50,000 ரூபாய் வரை கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?


என்.விக்னேஷ், கோவை.

முதலில் வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தி வர வேண்டும். அதில் சுணக்கமோ, தாமதமோ இருக்குமானால், முத்ரா லோன் கிடைப்பது கஷ்டம். சிறு, குறு தொழில் செய்யத் தேவைப்படும் மூலதனத்தை வழங்குவதற்கு உருவாக்கப்பட்டது தான் முத்ரா கடன் திட்டம்.

இதில், கடன் கோருபவர்களுடைய தகுதியை கணிப்பது, நிர்ணயிப்பது, முடிவெடுப்பது உள்ளிட்டவை, அந்தந்த வங்கிகளுடைய பொறுப்பு.

அந்த வகையில், கடன் கோருபவர், எந்த நிதி நிறுவனத்திலும், வங்கியிலும் ஏற்கனவே வாங்கிய கடனுக்கான 'டிபால்டராக' இருக்கக் கூடாது என்பது இந்தத் திட்டத்தின் அடிப்படைகளில் ஒன்று. நீங்கள் உங்கள் கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தி வருபவர் என்றால், தாராளமாக முத்ரா கடன் கேட்டுப் பாருங்கள்.

மூத்த குடிமக்கள், பிக்செட் டிபாசிட்டில் பணம் போடும்போது, எந்த கண்டிஷன்களில் டி.டி.எஸ்., பிடிக்காமல் இருக்க 15 எச். படிவம் வங்கியில் கொடுக்க வேண்டும்?


வைகை வளவன், மதுரை.

மூத்த குடிமக்களின் மொத்த வரிவிதிக்கக்கூடிய ஆண்டு வருவாய், அதாவது, வங்கி வைப்பு நிதிகளில் இருந்து கிடைக்கும் வட்டி, ஓய்வூதியம் உள்ளிட்டவை, வருமான வரி விலக்கு வரம்புக்குள் இருக்குமானால், அப்போது இந்த படிவம் 15 எச். நிரப்பி, வங்கிக்கு வழங்க வேண்டும். ஒரு மூத்த குடிமகனது வட்டி வருவாய் 50,000ரூபாய்க்கு மேல் இருக்குமானால், டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்பது வருமான வரி விதி.

மூத்த குடிமக்கள் விஷயத்தில், மொத்த வரிவிதிக்கக்கூடிய ஆண்டு வருவாயே, வருமான வரி விலக்குக்குள் இருக்குமானால், டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படக் கூடாது. மேலும், இந்த வட்டி வருவாய் என்பது அனைத்து சேமிப்புகளில் இருந்தும் கிடைக்கும் மொத்த வட்டியையும் உள்ளடக்கியது. இதை வங்கிக்கு தெரிவிக்கத் தான் 15 எச். படிவத்தை சமர்ப்பிக்கச் சொல்கின்றனர்.

நான் 30 ஆண்டுகளுக்கான வீட்டுக்கடன் வாங்கிவிட்டேன். எப்படி இது அடையப் போகிறதோ, எப்போது இந்தக் கடனில் இருந்து வெளியே வருவேனோ என்று யோசித்தால், மலைப்பாக இருக்கிறது. எப்படி கையாள்வது?


ஜெ.தவசீலன், கோவை.

இரண்டு விஷயங்களை திட்டமிட்டுச் செய்தால் 10 ஆண்டுகளுக்குள்ளேயே மொத்த கடனையும் உங்களால் அடைத்துவிட முடியும். ஆண்டுக்கு ஒரே ஒருமுறை, ஒரு தவணை இ.எம்.ஐ., தொகையைக் கூடுதலாக கட்டுங்கள்.

அதேபோல், ஒவ்வோர் ஆண்டும், இ.எம்.ஐ., தொகையைப் 10 சதவீதம் உயர்த்திக்கொள்ளுங்கள். இந்த இரண்டு உத்திகளின் வாயிலாக, திருப்பிச் செலுத்தவேண்டிய அசல் தொகை கணிசமாகக் குறைந்துவிடும். திருப்பிச் செலுத்தும் காலமும் படபடவென கீழே இறங்கிவிடும். மனசு இருந்தால் மார்க்கமுண்டு!

கிராமப்புறத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க எவ்வளவு செலவாகும்? லிட்டருக்கு எவ்வளவு லாபம் வரும்?


செல்வராஜ் மகாலட்சுமி,

மதுரை.

பெட்ரோல் பங்க் ஐடியாவையே மறந்துவிடுங்கள். பெட்ரோல், டீசல் வாகனங்கள் அந்திம காலத்தை நெருங்கிவிட்டன. அடுத்த 10 ஆண்டுகளில், நம் நாட்டில், மின்வாகனங்கள் மட்டும் தான் சாலைகளில் நிறைந்திருக்கும். நம் மத்திய அரசு, மின்சார சார்ஜிங் ஸ்டேஷன்களை உருவாக்குவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்ப நெகிழ்வான கொள்கைகளை வகுத்து, அதை ஜனநாயகப்படுத்தி வருகிறது.

கடந்த செப்டம்பர் 20ம் தேதி கூட, திருத்தப்பட்ட கொள்கை வரைவை மத்திய மின் துறை வெளியிட்டுள்ளது. கோடீஸ்வரர்கள் மட்டும் தான் பெட்ரோல் பங்க் வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி, இனி சாதாரணர்களும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் நடத்தலாம் என்ற நிலை வரப் போகிறது.

வட இந்தியாவில் பல மின்சார நிறுவனங்கள், சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க, முகவர்களை நியமித்து வருகின்றன. அவை விரைவில் தமிழ்நாட்டுக்கும் வரும். அரசும் இத்தகைய ஸ்டேஷன்களை அமைக்க மானியங்களை வழங்குகிறது. தொடர்ந்து இந்தத் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்து படித்து வாருங்கள். 2025ல் இது லாபம் தரும் பெரிய தொழிலாக வளரப் போகிறது.

என் மகள் பெயரில் பி.பி.எப். போட்டு வருகிறேன். இனிமேல் அந்த முதலீட்டுக்கு முழு வட்டி கிடைக்காதா?


எஸ்.தர்மராஜன், கடலுார்.

ஆமாம். அக்டோபர் 1ம் தேதி முதல் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில், ஒன்று தான் நீங்கள் குறிப்பிடுவது.

குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யும் பி.பி.எப்., கணக்குக்கு, 7.10 சதவீத வட்டி வழங்கப்படமாட்டாது. 18 வயது ஆகும் வரை, அஞ்சலக சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்படும் வட்டியே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அஞ்சலக சேமிப்புக் கணக்குக்கு நான்கு சதவீத வட்டியே கொடுக்கப்படுகிறது.

ஒரு விஷயம் புரியவில்லை. இந்த பி.பி.எப்., கணக்கின் கவர்ச்சியே அதன் பாதுகாப்பும், வட்டியும் தான். பல குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடனே, இந்த கணக்கைத் துவங்கி, ஆண்டுதோறும் 1.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்து வருகின்றனர். 18 வயது ஆகும்போது, அவர்களுடைய மேற்படிப்புக்கோ, தொழில் துவங்கவோ, அந்தத் தொகை உதவும்.

இதில் இருக்கும் வட்டி என்ற சாதகமான அம்சத்தை குறைத்துவிட்டால், யார் முதலீடு செய்ய வருவர்?

ஒருபக்கம் சிறுசேமிப்பு, வங்கிச் சேமிப்புகளில் மக்கள் பணம் போடவில்லை, பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு பக்கம் போய்விட்டனர் என்று அங்கலாய்க்கும் ஆர்.பி.ஐ., பொதுமக்களுக்குப் பலன் தரத்தக்க முதலீட்டில் வட்டியைக் குறைப்பது ஏனோ?

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

ph: 98410 53881






      Dinamalar
      Follow us