செபியின் கண்காணிப்பு வளையத்தில் பெரும் பணக்காரர்களின் 'பேமிலி ஆபீஸ்'
செபியின் கண்காணிப்பு வளையத்தில் பெரும் பணக்காரர்களின் 'பேமிலி ஆபீஸ்'
ADDED : அக் 03, 2025 11:46 PM

மும்பை,:நம் நாட்டின் பெரும் பணக்காரர்களின் குடும்ப வருவாயை பராமரிக்கும் அலுவலகங்களை, தன் நேரடி பார்வையில் கொண்டு வர, செபி பேச்சை துவங்கியுள்ளது.
இது தொடர்பாக, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழும தலைவர் கவுதம் அதானி ஆகியோரின் அலுவலகங்களுடன் பேச்சை துவங்கியிருப்பதாக செபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரும் கோடீஸ்வரர்களின் குடும்பத்தினரின் சொத்துக்களை நிர்வகிப்பது, முதலீடு செய்வது ஆகியவற்றில் ஈடுபடும் அலுவலகங்களிடம், குடும்பத்தின் சொத்துக்கள், முதலீடுகள் மற்றும் வட்டி உள்ளிட்ட வருவாய் ஆகிய விபரங்களை, முதல்முறையாக செபி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய குழும நிறுவனங்களின் உரிமையாளராக உள்ள குடும்பங்களின் பங்கு சந்தை முதலீடு மற்றும் எதிர்கொள்ளக்கூடிய அபாயங்கள் குறித்து, கூடுதல் விபரங்களை அறிய செபி விரும்புகிறது. இதனால், பெரும் தொழிலதிபர்களின் குடும்ப நிதி நிர்வாகத்தை கவனிக்கும் அலுவலக அதிகாரிகளுடன், செபி அதிகாரிகள் கூட்டங்களை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
செல்வந்தர்களின் சொத்து நிர்வாக அலுவலகங்களை முறைப்படுத்த, நம் நாட்டில் இதுவரை குறிப்பிடத்தக்க விதிமுறைகள் ஏதும் இல்லை.
தற்போது அந்த அலுவலகங்களின் முதலீடுகள், பங்கு சந்தை முதலீடு போன்றவற்றில் புதிய விதிகளை ஏற்படுத்த செபி திட்டமிட்டுள்ளது.
பேமிலி ஆபீஸ்
மிகப்பெரும் செல்வந்தர்கள், தங்கள் குடும்பச் சொத்துக்களை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும், அதிலிருந்து மேலும் லாபம் ஈட்ட முதலீடுகள் செய்யவும் ஒரு தனிப்பட்ட அலுவலகத்தை அமைப்பர். அதைத் தான் 'பேமிலி ஆபீஸ்' என்று அழைக்கின்றனர்.
* பெரும் பணக்காரர்களின் அதிகளவிலான முதலீடுகள், சந்தைகளில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும்
* பெரும் முதலீடுகளை திடீரென விலக்கிக் கொள்ளுதல், இடமாற்றம் செய்தல் ஆகியவற்றால் பாதிப்பை ஏற்படுத்தலாம்
* 20 ஆண்டுகளுக்கு முன், ஒரு சில குடும்ப அலுவலகங்களே இருந்தன. தற்போது பல மடங்காக உயர்வு
* சொத்து மேலாண்மை அலுவலகங்கள், ஸ்டார்ட்அப் மற்றும் ஐ.பி.ஓ.,க்களில் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.