பண்டமென்டல் அனாலிசிஸ்:சவால்களை கடந்து ' புளுசிப் ' நிறுவனமான பார்தி ஏர்டெல்
பண்டமென்டல் அனாலிசிஸ்:சவால்களை கடந்து ' புளுசிப் ' நிறுவனமான பார்தி ஏர்டெல்
UPDATED : அக் 12, 2025 04:11 AM
ADDED : அக் 12, 2025 04:07 AM

இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான பார்தி ஏர்டெல், இந்தியா உட்பட 18 நாடுகளில், மொபைல் நெட்வொர்க், பிராட்பேண்டு, பிக்ஸட் லைன் இண்டர்நெட், டி.டி.எச்., உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, கிட்டத்தட்ட 60 கோடி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
சராசரி வருவாய் வளர்ச்சி:
ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாய் 250 ரூபாயாக உள்ளது. இது மற்ற நிறுவனங்களை விட சிறப்பாகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் சராசரியாக 25 ஜி.பி., டேட்டா பயன்படுத்துவதால், இந்நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து வரிக்குப் பிந்தைய லாபம் அதிகமாகிறது.
2025 டிசம்பர் முதல் 2026 ஜூலை மாதத்துக்குள் கட்டணம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய கட்டண உயர்வில் 80--90 சதவீதம் வரை இதன் தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் கட்டண உயர்வுகள் மற்றும் சேவை மேம்பாடு காரணமாக சராசரி வருவாய் 250 ரூபாயி-லிருந்து 300 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்டெல் ஹோம்ஸ்/ எப்.டபிள்யு.ஏ., பிரிவு:
மெட்ரோ மற்றும் முதல்நிலை நகரங்களில், சந்தை வளர்ச்சி அதன் எல்லையை எட்டிய நிலையில், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், பார்தி ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு வளர்ச்சி வாய்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது 1.50 கோடி வீடுகளுக்கு மட்டுமே பைபர் இணைப்பு உள்ளது. ஆனால், 7.50 கோடி வீடுகள் பைபர் இணைப்பு ஏற்படுத்திக் கொள்வதற்கான வசதி உள்ளது. இந்த இரண்டு தொழில்களின் வளர்ச்சி, வரும் ஆண்டுகளில் அதிகமாக இருக்கும்.
இதன் ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாய் கிட்டத்தட்ட 537 ரூபாய் ஆக உள்ளது. தற்போது இதன் வருவாய் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 5% மட்டுமே.
வலுவான நிலையில் ரொக்க தொகை:
கடந்த 2024-25 நிதியாண்டு காலத்தில், ஏர்டெல் 5ஜி சேவை விரிவாக்கத்திற்காக பெரிய அளவில் முதலீடு செய்தது. ஆனால் 2026ம் நிதியாண்டு முதல், மூலதன செலவினங்கள் குறைவதற்கான அறிகுறிகள் உள்ளன.
இதன் காரணமாக தொழில் நடவடிக்கைகளுக்கு பிறகான ரொக்கத் தொகை அதிகரிக்கும். 2024--25ம் நிதியாண்டில், நிறுவனத்தின் ரொக்கத் தொகை 34,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே 2023--24ல் 20,500-21,500 கோடி ரூபாயாக இருந்தது.
வரும் 2026 - 28 நிதியாண்டுகளில் ரொக்கத் தொகை வளர்ச்சி தொட ரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிக ரொக்கத் தொகை கடனைக் குறைக்கவும் பங்குதாரர்களுக்கு அதிக வருமானம் வழங்கவும் பயன்படுத்தப்படும்.
ஆப்ரிக்கா வாய்ப்பு:
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்ரிக்க வணிகப் பிரிவு, ஒருங்கிணைந்த இ.பி.ஐ.டி.டி.ஏ-.,வில் கிட்டத்தட்ட 22 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. 2018ம் ஆண்டு முதல், லாப வரம்பு குறிப்பிடத்தக்க அளவில் கிட்டத்தட்ட 33 சதவீதத்தி-லிருந்து தற்போது 47 சதவீதம் வரை மேம்பட்டுள்ளது. டேட்டா சேவைகளின் வலுவான வளர்ச்சியும், மொபைல் பணப் பரிவர்த்தனை தளமான 'ஏர்டெல் மனி'-யின் வெற்றியுமே இதற்குக் காரணம்.
ஆப்ரிக்க சந்தையில் 39 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே டேட்டா சேவையைப் பயன்படுத்துவதால், வரும் காலங்களில் இந்த சந்தை நல்ல வளர்ச்சியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய சாதக அம்சங்கள்
1 சேவை கட்டண உயர்வு, 4ஜி,- 5ஜி சேவைக்கு மாற்றம் அடைதல், ஏர்டெல் ஹோம்ஸ் தொழில் வளர்ச்சி ஆகியவற்றால் ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 மூலதன செலவினம் முடிவுக்கு வருவதால், தொழில் நடவடிக்கைகளுக்கு பிறகான ரொக்கத் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 ஆப்ரிக்காவில் தொழில் வளர்ச்சிக்கான நேர்மறை சாத்தியங்கள்.
இருப்பினும், ரிலையன்ஸ் ஜியோவின் வளர்ச்சி, வோடபோன் மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனங்களின் மூலதன முதலீடுகள் போன்ற சவால்களும் உள்ளன. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிறுவன மதிப்பு / ஈபிட்டா விகிதம் 8-19 மடங்கு என்ற அளவில் வர்த்தகமாகும் நிலையில், தற்போது பார்தி ஏர்டெல் மற்றும் ஜியோ 1,2-14 மடங்கு என்ற அளவில் வர்த்தகமாகி வருகின்றன.
போட்டித்தன்மையை சமாளித்தல், அதிக மூலதன முதலீட்டு செலவினம் மற்றும் வெளிநாடுகளில் எதிர்கொண்ட நிர்வாக சிக்கல்கள் என பல்வேறு சவாலான கட்டங்களை கடந்து, ஒரு புளூசிப் நிறுவனமாக பார்தி ஏர்டெல் வளர்ந்துள்ளது. எனவே சந்தை இறங்கும்போது இந்த நிறுவனத்தை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளலாம்.