ஃபண்டமென்டல் அனாலிசிஸ் கோல் இந்தியா: நிலையான லாப வரம்பு கொண்டது
ஃபண்டமென்டல் அனாலிசிஸ் கோல் இந்தியா: நிலையான லாப வரம்பு கொண்டது
ADDED : நவ 09, 2025 02:15 AM

இந்தியாவின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனம் கோல் இந்தியா. நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் 70% சதவீதத்தை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இதில் 80 சதவீத உற்பத்தியை மின் நிலையங்களுக்கு வினியோகம் செய்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தற்போது வளர்ந்து வரும் நிலையிலும், இந்தியாவின் 65 சதவீத மின்சாரம் நிலக்கரி மூலமாகவே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தேவையும் வளர்ச்சியும் இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சியும், வீட்டு உபயோக தேவை வளர்ச்சியும் ஏற்பட்டு வருவதால், மின்சாரத்துக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
2030ம் ஆண்டுக்குள், மின்சார தேவை 363 ஜிகாவாட் ஆகவும்; நிலக்கரி தேவை 130-150 கோடி டன் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சில ஆண்டுகளில், கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, மிதமான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டு அடிப்படையில், 2-4 சதவீதம் வரை உற்பத்தி வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்படுகிறது.
நடப்பு 2025 - 26ம் நிதியாண்டு இரண்டாவது காலாண்டில், கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 14.50 கோடி டன்னாக உள்ளது. இது கடந்த நிதியாண்டை காட்டிலும் 4 சதவீதம் குறைவு. இருப்பினும், 166 மில்லியன் டன் நிலக்கரி வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.
இதுவும் கடந்த நிதியாண்டை காட்டிலும் 1 சதவீதம் குறைவு. தொடர்ந்து பெய்த பருவமழை மற்றும் மிகக் குறைவான மின்நிலைய கொள்முதல் ஆகியவற்றால் உற்பத்தி குறைந்துள்ளது. சுரங்கத்திலுள்ள நிலக்கரி பங்கு, தொடர்ச்சியாக 20 சதவீதம் குறைந்து, 78 மில்லியன் டன்னாக உள்ளது.
பருவமழை காரணமாக, அனல் மின்சார தேவை குறைவாக உள்ளது. ஆனால், அடிப்படை வளர்ச்சிக் காரணிகள் வலுவாக உள்ளன. இந்தியாவின் மின்சார பயன்பாடு ஆண்டுக்கு 5 - 6 சதவீதம் எனும் அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் 40 ஜிகாவாட் அளவிலான நிலக்கரி அடிப்படையிலான புதிய மின்நிலையங்கள் தற்போது கட்டுமானத்தில் உள்ளன.
இந்நிறுவனம் 2025 - -26ம் நிதியாண்டில், 875 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது 2024 -- 25ம் நிதியாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 78.10 கோடி டன்னை விட அதிகம்.
விலை மற்றும் லாப வரம்பு கோல் இந்தியா நிறுவனம், நிலக்கரியை பெரும்பாலும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையிலேயே விற்பனை செய்து வருகிறது. இணையவழி ஏலத்தில் விற்கப்படும் நிலக்கரி 10 - 15 சதவீதம் கூடுதல் விலையில் விற்கப்படுகிறது.
2024 - 25ம் நிதியாண்டில் இணையவழி ஏலங்கள் வாயிலாக விற்கப்பட்ட நிலக்கரியின் அளவு 79 மில்லியன் டன். நீண்ட கால ஒப்பந்தத்தில் விற்கப்பட்ட நிலக்கரியை விட, கிட்டத்தட்ட 68 சதவீத பிரீமியம் விலையில், இணையவழி ஏலத்தின் வாயிலாக கடந்த நிதியாண்டில் விற்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை குறைந்துள்ளது. 2022ம் ஆண்டு, நிலக்கரி ஒரு டன் விலை 440 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது இது 110 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இதனால் மின் ஏலம் வாயிலாக விற்கப்படும் நிலக்கரியின் விலையும் நிலையாக உள்ளது.
கோல் இந்தியா நிறு வனம், மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 15 சதவீத நிலக்கரியை, 70 சதவீத பிரீமியம் விலையில் மின் ஏலத்தில் விற்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த வருவாய் மற்றும் லாப வரம்பை வலுப்படுத்துவதற்கு உதவும்.
மூலதன செலவு அடுத்த 4-5 ஆண்டுகளில், நிறுவனம் 15,0-00-20,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
உற்பத்தியை அதிகப்படுத்துதல், போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சுரங்க மேம்பாடு மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி (2028ம் நிதியாண்டுக்குள் 3ஜிகாவாட் இலக்கு) போன்றவற்றில் முதலீடு செய்ய இருக்கிறது. இது இந்தியாவின் வளர்ச்சியை ஒட்டிய இலக்காக இருக்கிறது.
ரிஸ்க் -தனியார் சுரங்கங்களின் வளர்ச்சி,- அனுமதி அளிப்பதில் தாமதம், கொண்டு செல்வதில் தாமதம், -புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான அழுத்தம்.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் கோல் இந்தியா நிறுவனம் முன்னணி பங்கு வகுக்கிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சி மிதமாக இருந்தாலும் லாப வரம்பு நிலையாக உள்ளது.
மேலும் டிவிடெண்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நிறுவன மதிப்பும் குறைவாக உள்ளதால் நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தை கருத்தில் கொள்ளலாம்.
நிறுவனத்தின் வளர்ச்சி மிதமாக இருந்தாலும், நிலையாக உள்ள லாப வரம்பு, தொடந்து வழங்கப்பட்டு வரும் டிவிடெண்டு, நிறுவன மதிப்பு குறைவாக உள்ளது ஆகியவற்றால், நீண்ட கால முதலீட்டாளர்கள், இந்நிறுவனத்தை கருத்தில் கொள்ளலாம்.

