sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?

/

வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?

வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?

வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?


ADDED : அக் 12, 2025 11:12 PM

Google News

ADDED : அக் 12, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசு, நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அவற்றை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள எந்த வலைதளத்தை பார்க்க வேண்டும்?

கே.சதிஷ்குமார்,

கோவை.

இந்த வலைதளத்துக்கு செல்லுங்கள் : https://www.myscheme.gov.in/. இதில் மத்திய, மாநில அரசுகளின் கிட்டத்தட்ட 4,150 திட்டங்களின் மொத்த விபரங்களும் உள்ளன. இவற்றை பெறுவதற்கான விண்ணப்பத்தை எப்படி பதிவு செய்வது என்ற விளக்கமான வழிகாட்டுதல்களும் இதில் உள்ளன.

வங்கிகள் திவால் ஆனால், வாடிக்கையாளர், 5 லட்சம் ரூபாய் வரையிலான இழப்பீடை, காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகத்திடம் இருந்து பெற முடிகிறது. ஆனால், பி.பி.எப்., எனும் பொது வருங்கால வைப்பு நிதியில் சேமிப்பவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?

ராஜசேகர், வாட்ஸாப்.

பி.பி.எப்., கணக்குகளில் சேமிக்கும் பணம் முழுமையாக மத்திய அரசின் பாதுகாப்பில் இருக்கும். இது மத்திய அரசின் நேரடி உத்தரவாதத்தால் பாதுகாக்கப்படுகிறது. எனவே, வங்கி திவாலானாலும், பி.பி.எப்., தொகை பாதுகாப்பாக இருக்கும்.

நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயற்பொறியாளர் ஆக பணிபுரிந்து 2015ல் ஓய்வு பெற்றேன். 2014-15க்கு வருமானவரி செலுத்தவில்லை என்று வருமானவரி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அலுவலகத்தின் வாயிலாக நான் வருமான வரி செலுத்திய படிவம் 16 என்னிடம் உள்ளது. 26 ஏ.எஸ். படிவத்தில் வரி செலுத்தியது குறிப்பிடப்படவில்லை என்று கூறுகிறார்கள். என்ன செய்வது?

என். பாஸ்கரன், மேலுார், மதுரை.

உங்கள் பழைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உங்களிடம் பிடித்தம் செய்த டி.டி.எஸ். தொகையை வருமான வரி துறைக்குச் செலுத்தவில்லை என்றாலோ, பான் எண் தவறாக இருந்தாலோ, இந்த பிரச்னை வரும். தமிழ்நாடு மின்வாரியம் டி.டி.எஸ். தொகையை இத்தனை ஆண்டுகளாக செலுத்தாமல் இருக்க வாய்ப்பில்லை. 2014-15 ஆண்டுக்கான டி.டி.எஸ் ரிட்டர்ன்(படிவம்24Q) தாக்கல் செய்யப்பட்டது என்பதை அவர்களிடம் இருந்து உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். ஆடிட்டர் ஒருவரிடமும் கலந்தாலோசியுங்கள். வேறு காரணங்கள் இருந்தால், அதை சரி செய்து கொள்ளுங்கள்.

வங்கி லாக்கரில் வைக்கப்படும் தங்க நகைகள் எதிர்பாராத விபத்திலோ, திருட்டு சம்பவத்திலோ, அதனை திரும்ப பெறும் வழிவகைகள் என்ன?

எஸ்.ஹேமலதா, காஞ்சிபுரம்.

எதிர்பாராத விபத்து என்பது பொதுவாக இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட சமயங்களில் தான் நடக்கும். அத்தகைய நேரங்களில், வங்கியானது போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை, எச்சரிக்கை மணிகளைப் பொருத்தவில்லை, வழக்கமான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்பது நிரூபணமானால் தான், வாடிக்கையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும். இவையெல்லாம் ஒழுங்காகச் செய்யப்பட்டு இருந்தால், நஷ்ட ஈடு கிடைக்காது.

வங்கியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைபாடு, அலட்சியம் அல்லது ஊழியர்களின் தவறான நடத்தை காரணமாக திருட்டு நடந்திருந்தால், அப்போது, பாதுகாப்பு பெட்டகத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும். அந்த பெட்டகத்துக்கு ஆண்டொன்றுக்கு அவர் செலுத்திய வாடகையை போல் 100 மடங்கு நஷ்ட ஈடாக கிடைக்கும். உதாரணமாக, 3,000 ரூபாய் வாடகை என்றால், 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கிடைக்கும்.

அடுக்குமாடி குடியிருப்பில், வங்கியின் பெயரில் உள்ள சில வீடுகளில் யாரும் வசிக்கவில்லை. அதனால்,பராமரிப்பு தொகை செலுத்த வங்கி மறுக்கிறது. அவர்கள் பராமரிப்பு தொகையை தவிர்க்க உரிமை உண்டா?

எம்.வித்யதீஷா, திருப்பூர்.

குடியிருப்பின் உரிமையாளர் யாராக இருந்தாலும், யாரும் அங்கு வசிக்கவில்லை என்ற காரணத்தால் பராமரிப்பு கட்டணத்தை தவிர்க்க முடியாது. தமிழ்நாடு அப்பார்ட்மென்ட் ஓனர்ஷிப் சட்டத்தின்படி, ஒவ்வொரு உரிமையாளரும் தங்களுக்குரிய பங்கான பொதுச் செலவுகளை செலுத்த வேண்டும்.

எனவே, உங்கள் குடியிருப்பு சங்கத்தின் விதிகளை அடிப்படையாக கொண்டு, வங்கிக்கு எழுத்துப்பூர்வமான நோட்டீஸ் அனுப்புங்கள். அவர்கள் பதிலளிக்காவிட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம்.

ஆர்.இ.ஐ.டி.. என்றால் என்ன?

ஜி.பி.சுபாஷ் சந்தர் , திண்டுக்கல்

ஆர்.இ.ஐ.டி., என்றால் ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்ட். இந்தியாவில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான ஒரு புதிய வகை முதலீட்டு வாய்ப்பு இது. நம் நாட்டில், அலுவலக கட்டடங்கள், வணிக வளாகங்கள், டேட்டா மையங்கள், மால்கள் உள்ளிட்ட பெரிய கட்டுமானங்களை வாங்கி, நிர்வகித்து, வாடகை வசூல் செய்வதோடு, அவற்றின் மதிப்பும் தொடர்ந்து உயர்வதால், அதன் வாயிலாக லாபம் ஈட்டக்கூடிய பெரிய டிரஸ்ட்கள் இவை.

இத்தகைய பெரிய சொத்துகளில், சிறிய முதலீட்டாளர்களும் பங்குபெறுவதற்கு என்றே இந்த ஆர்.இ.ஐ.டி., க்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனக்குத் தெரிந்து இதுவரை நான்கு ஆர்.இ.ஐ.டி.க்கள் நம் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. தொடர்ந்து அதிகரித்து வரும் வணிக வளாக, அலுவலக மையங்களுக்கான தேவை, இத்தகைய ஆர்.இ.ஐ.டி.,களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன. வாடகை வருவாய் தொடர்ச்சியாக கிடைக்கும் என்பதால், நீண்ட கால அளவில் நல்ல முதலீடாக இது பார்க்கப்படுகிறது.

என் பான் அட்டையில், என் தந்தை பெயருடன் எனது பெயர் உள்ளது. ஆதார் அட்டையில் பாலசுப்ரமணியன்.எஸ் என்று இருக்கிறது. வங்கி கணக்கில் என் பெயர் மட்டும் உள்ளது. இவை அனைத்தையும் ஒரே மாதிரி எப்படி திருத்துவது?

எஸ்.பாலசுப்பிரமணியன், மேற்கு மாம்பலம்.

பெரும்பாலும் உங்கள் பள்ளி இறுதி சான்றிதழ் தான் இதற்கு ஆரம்பம். அதில் என்னவிதமாக பெயர் பதியப்பட்டு உள்ளதோ, அதன்படியே ஆதாரிலும் பின்னர் வங்கிக் கணக்கிலும், இதர இடங்களிலும் மாற்றிக் கொள்ளலாம். 'என் தந்தை தவறாக பெயர் கொடுத்துவிட்டார், அல்லது அந்த பெயர் எழுதும் முறை எனக்குப் பிடிக்கவில்லை' என் றெல்லாம் நீங்கள் அங்கலாய்த்தால், அரசிதழில் பெயர் மாற்ற அறிவிப்பு வெளியிட்டு, உங்களுக்குப் பிடித்த மாதிரி பெயரை வைத்துக் கொள்ளலாம்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்






      Dinamalar
      Follow us