/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: தங்க நகையை நஷ்டமின்றி விற்க என்ன வழி?
/
ஆயிரம் சந்தேகங்கள்: தங்க நகையை நஷ்டமின்றி விற்க என்ன வழி?
ஆயிரம் சந்தேகங்கள்: தங்க நகையை நஷ்டமின்றி விற்க என்ன வழி?
ஆயிரம் சந்தேகங்கள்: தங்க நகையை நஷ்டமின்றி விற்க என்ன வழி?
ADDED : பிப் 16, 2025 10:53 PM

புது பட்ஜெட் அறிவிப்பின்படி, ஒன்றரை லட்சம் ரூபாயை, பப்ளிக் பிராவிடண்ட் பண்டில் முதலீடு செய்தால், அதற்கு 80சி கிடையாதாமே? இது உண்மையா?
சி.கிருஷ்ணன், சென்னை.
உண்மை தான். அதற்கு முன்னர் ஒரு விஷயம். உங்கள் கேள்விக்கு ஒரு சிறப்பு உண்டு. ஆயிரம் சந்தேகங்கள் பகுதியின் 200வது அத்தியாயத்தின் முதல் கேள்வி உங்களுடையது. வரும் நிதியாண்டில், ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு + கழிவு வழங்கப்படும் என்பதால், பொது வருங்கால வைப்பு நிதி திட்டமும் இதற்குள் அடங்கி போய்விட்டது.
பழைய வரி திட்டத்தில் 80சியின் கீழ் இந்த முதலீட்டை காண்பித்து, வரி சலுகை பெறுவீர்கள். புதிய வரி திட்டத்தில் 80சி எல்லாம் இல்லை. ஒருவேளை, நீங்கள் பழைய வரி திட்டத்தை பின்பற்றினால், பி.பி.எப்., முதலீட்டுக்கான சலுகையை கோர முடியும்.
தனியார் நிதி நிறுவனங்களில் நகைகளை விற்பனை செய்யும்போது, குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. நகை கடையில் நகைகளை திரும்ப கொடுத்து பணம் கேட்டால், 'எக்ஸ்சேஞ்ச் ஆபர்' தான் உள்ளது என்று கூறி பணம் கொடுக்க மறுக்கின்றனர். நகைகளை விற்பனை செய்ய வேறு வழிமுறைகள் உண்டா?
வி.மணி, கோவை-.
சட்டப்பூர்வமான வழிமுறை எதுவும் தெரியவில்லை. இந்த தங்க வர்த்தகம் முழுதுமே வணிகர்கள் சார்ந்தே இருக்கிறது. அப்பாவி வாடிக்கை யாளர்கள் ஏதோ பெரிய அளவில் லாபம் பார்த்துவிட முடியும் என்று நம்பி, தங்க ஆபரணங்களில் பணத்தை போடுகின்றனர்.
நீங்கள் சொல்வது போல் விற்பனை செய்யப் போனால், குறைந்த விலைக்குத் தான் வாங்குகின்றனர். இந்த லாஜிக் தான் இடிக்கிறது.
விற்பனை விலையும், வாங்கும் விலையும் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும்? அடகு வைக்கப் போகும்போது, அங்கே 'மார்ஜின் ஆப் சேப்டி' என்றொரு அம்சம் வருகிறது.
கடனை திருப்பிச் செலுத்தாமல் போனால், ஆபரணத்தை ஏலத்துக்கு கொண்டு வந்து அசலையும், வட்டியையும் திரும்ப பெற வேண்டும் என்பதற்காக, தங்கத்தின் மதிப்பில் 75சதவீதம் வரை கடன் கொடுக்கின்றனர்.
ஆனால், ஆபரணத்தை விற்பனை செய்யும் போது, ஏன் வாங்கும் விலை குறைவாக இருக்க வேண்டும்? ஏற்கனவே சேதாரம் போட்டு தான் நகையை எடுத்துக் கொள்கின்றனர். அதிலும் குறிப்பிட்ட அளவு பணம் போய் விடுகிறது. மத்தியமர்களின் தங்கக் கனவை கொள்ளையடிக்கின்றனர்.
என் வயது 72. தேசிய வங்கியில் 10 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்து இருக்கிறேன். வட்டி 5,000 ரூபாய் தான் வருகிறது. என்ன செய்வது?
லீலா, திருப்பூர்.
ஆண்டுக்கு 60,000 ரூபாய் என்றால், தோராயமாக 6 சதவீத வட்டி தான் உங்களுக்கு வருகிறது. பொதுத் துறை வங்கிகளிலேயே மூத்த குடிமக்களின் ஐந்து ஆண்டு வைப்பு நிதித் திட்டங்களுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் 7.40 சதவீதம் வட்டி கிடைக்கிறது.
அதனால், வேறு வங்கிகளுக்கு உங்கள் முதலீட்டை மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்த ஓராண்டில், வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ள நிலையில், விரைந்து போய் வைப்பு நிதியை எடுத்து, கூடுதல் வட்டி தரும் நீண்ட கால வைப்பு திட்டங்களில் பணத்தை போடுங்கள்.
கூகுள் பே வழியாக என் அலுவலக நண்பர் ஒருவருக்கு, 50,000 ரூபாய் கடன் கொடுத்தேன். 10,000 ரூபாய் திரும்ப கொடுத்தார். அதன் பின்னர் வேலையை விட்டுவிட்டு காணாமல் போய் விட்டார். என் அழைப்பையே எடுப்பதில்லை. என் பணத்தை திரும்பப் பெறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?
எஸ்.சிவகுமார், மின்னஞ்சல்.
இல்லை. ஏதேனும் தர்ம காரியத்துக்கு பணம் கொடுத்ததாக நினைத்துக் கொண்டு, மறந்து விடுங்கள். ஒருவேளை கிடைத்தால் அதிர்ஷ்டம். பணம் திரும்ப வரவில்லையே என்ற ஆதங்கம், எரிச்சல், வெறுப்பு எல்லாம் சேர்ந்து உங்கள் மனநிலையையும், உடல்நிலையையும் பாதித்துவிடும். இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததையே மறந்துவிட்டு, ஹேப்பியாக இருங்கள். மன ஆரோக்கியமாவது மிஞ்சும்.
நான் சென்னையில் வசிக்கும் மூத்த குடிமகன். 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கான ஹெல்த் கார்டுக்கு விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்துள்ளேன். ஆனால், சென்னையில் உள்ள எந்த மருத்துவமனையும், 5 லட்சம் ரூபாய் வரையான பணமில்லா காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, மத்திய அரசில் இருந்து இழப்பீட்டு நிதி விடுவிக்கப்படவில்லை என்பதால், இதுவரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்கின்றனர். அப்படி யானால் எங்களது நிலை என்ன?
ஜி.கிரிதரன், மின்னஞ்சல்.
இதில் யார் சொல்வதை நம்புவது என்று தெரியவில்லை. சமீபத்தில் ராஜ்ய சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ், ஒரு விஷயத்தை தெரிவித்தார்.
நாடெங்கும் இருந்து பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், தனியார் மருத்துவமனைகள் மக்களுக்கு வைத்தியம் செய்ததாகச் சொல்லி, அனுப்பி வைத்த 562.40 கோடி ரூபாய்க்கான 2.7 லட்சம் கிளெய்ம்கள் போலியானவை, மோசடியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.
இதைத் தொடர்ந்து, 1,114 மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன; 549 மருத்துவமனைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளும் வணிகத் தலங்கள் தான். தேவையில்லாமல் அங்கே கருணையையோ, வேறு சலுகைகளையோ எதிர்பார்க்க வேண்டாம். முடிந்தவரை, எவ்வளவு துாரம் மருத்துவ காப்பீடு எடுக்க முடியுமோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
நான் கடந்த ஆண்டு 3 சவரனில் தங்க நகை வாங்கினேன். அதற்கு உரிய ஜி.எஸ்.டி., செலுத்தி உள்ளேன். இந்த மாதம் அந்த 3 சவரன் நகையை வாங்கிய கடையில் எக்ஸ்சேஞ்ச் செய்து, 5 சவரன் நகை வாங்கினேன். அதற்கு 5 சவரன் நகைக்கு ஜி.எஸ்.டி., செலுத்தினேன். ஏற்கனவே, 3 சவரன் நகைக்கு நான் செலுத்திய ஜி.எஸ்.டி.,யை கழித்து, 2 சவரனுக்கு தானே செலுத்த வேண்டும்?
சுக.மதிமாறன், திண்டுக்கல்.
உங்கள் கற்பனை வளம் அபாரம். ஆனால், யதார்த்தம் அதுவல்ல. இரண்டும் இருவேறு விற்பனைகள். வாங்குபவரும், கடையும் ஒன்றாக இருந்தாலும், இரண்டு விற்பனையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது அல்ல; தனித்தனியாகத் தான் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை,
'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற
நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph98410 53881