11 மணி நேரம் விமானம் தாமதம் பெங்களூரில் பயணியர் போராட்டம்
11 மணி நேரம் விமானம் தாமதம் பெங்களூரில் பயணியர் போராட்டம்
ADDED : ஜூலை 07, 2024 03:16 AM

பெங்களூரு: தொழில்நுட்பக் கோளாறால் டில்லியில் இருந்து 11 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டதால், பெங்களூரில் தரையிறங்கியதும் பயணியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, 'ஸ்பைஸ் ஜெட்' விமானம் புறப்பட இருந்தது.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரவு 10:30 மணிக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இரவு 10:30 மணிக்கும் புறப்படவில்லை.
இதுகுறித்து பயணியர் கேட்டபோது, விமானத்திற்குள் இருந்த பணிப்பெண்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. பயணியருக்கு தண்ணீர், உணவு வசதியும் செய்து கொடுக்கவில்லை. இரவு முழுதும் விமானம் புறப்படவே இல்லை.
நேற்று காலை 7:00 மணிக்கு டில்லியில் இருந்து புறப்பட்ட விமானம் பெங்களூருக்கு 9:30 மணிக்கு வந்தது.
விமானத்திலிருந்து இறங்கியதும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மீது பயணியர் கோபத்தை வெளிப்படுத்தினர். யாரும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை பயன்படுத்த வேண்டாம் என, கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். அவர்களை விமான நிலைய ஊழியர்கள் சமாதானப்படுத்திஅனுப்பினர்.
6.7.2024 / சுப்பிரமணியன்
7_DMR_0014
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன ஊழியரிடம், பயணியர் முறையிட்டனர்.