உ.பி., கூட்ட நெரிசல் விபத்தில் ஆசிரம நிர்வாகிகள் 6 பேர் கைது
உ.பி., கூட்ட நெரிசல் விபத்தில் ஆசிரம நிர்வாகிகள் 6 பேர் கைது
ADDED : ஜூலை 05, 2024 12:55 AM

மெயின்புரி, உத்தர பிரதேசத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலே பாபாவின் ஆசிரம நிர்வாகிகள் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில், ஆன்மிக தலைவரான போலே பாபாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி 2ம் தேதி நடந்தது. 80,000 பேருக்கு அனுமதி பெற்றிருந்த நிலையில், கூட்டத்தில் 2.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்து போலே பாபா சென்ற போது, அவரது காலடி மண்ணை எடுப்பதற்கு கூட்டத்தினர் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்ததில், 121 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார், சிறப்பு படை அமைத்து விசாரிக்கின்றனர்.
இது மட்டுமின்றி கூட்ட நெரிசலுக்கு சதி வேலை காரணமா என்பது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு அனுமதி பெற்ற தேவ்பிரகாஷ் மதுகர் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
தொடர்ந்து, போலே பாபாவுக்கு சொந்தமான மெயின்புரி ஆசிரமத்தில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
அங்கு, போலே பாபா மற்றும் முக்கிய ஒருங்கிணைப்பாளரான தேவ்பிரகாஷ் இல்லை; அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தை ஒருங்கிணைத்த ஆறு பேரை, வெவ்வேறு இடங்களில் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, நெரிசலில் உயிரிழந்த 121 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.