நடிகர் தர்ஷன் குற்றமற்றவர் 'பார்ட்டி' வழக்கில் அறிக்கை
நடிகர் தர்ஷன் குற்றமற்றவர் 'பார்ட்டி' வழக்கில் அறிக்கை
ADDED : மார் 31, 2024 11:06 PM

பெங்களூரு: 'பப்பில் இரவு பார்ட்டி நடத்திய வழக்கில், நடிகர் தர்ஷன் குற்றமற்றவர்' என நீதிமன்றத்தில், போலீசார் அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.
கன்னட திரை உலகில் முன்னணி நடிகர் தர்ஷன். இவரது நடிப்பில் வெளியான 'காட்டேரா' திரைப்படம், பெரிய வெற்றி பெற்றது. இதனால் கடந்த ஜனவரியில் படக்குழுவினர், பெங்களூரு சுப்பிரமணியநகரில் உள்ள, ஜெட் லக் 'பப்'பில் பார்ட்டி நடத்தினர். ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி, விடிய, விடிய பார்ட்டி நடத்தியதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து பப் உரிமையாளர் சசிரேகா மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நடிகர்கள் தர்ஷன், சிக்கண்ணா, டாலி தனஞ்ஜெய், அபிஷேக் அம்பரிஷ், சதீஷ் நினாசம், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், படத்தின் இயக்குனர் சுதீர் தருண், இசை அமைப்பாளர் ஹரிகிருஷ்ணா ஆகிய எட்டு பேர் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் அனைவரும் விசாரணைக்கு ஆஜராகி, விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் பெங்களூரு 1வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில், சுப்பிரமணியநகர் போலீசார், விசாரணை அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.
அந்த அறிக்கையில், 'அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி, தர்ஷன் உட்பட எட்டு பேரும், மது அருந்தவில்லை. உணவுக்காக மட்டுமே காத்து இருந்தனர். நேரத்தை மீறி பார்ட்டி நடத்தவில்லை' என்று கூறப்பட்டு உள்ளது.

