என்னை அடிக்க பாய்ந்தார்: சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு
என்னை அடிக்க பாய்ந்தார்: சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு
UPDATED : ஜூலை 25, 2024 10:18 AM
ADDED : ஜூலை 25, 2024 02:17 AM

கோல்கட்டா, சட்டசபை வளாகத்தில், திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., தபன் சாட்டர்ஜி தன்னை தாக்க முயன்றதாக, பா.ஜ., மூத்த தலைவரும், மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை சபாநாயகர் பிமன் பானர்ஜிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி எழுதிய கடிதம்:
நேற்று மதியம் 12:20 மணி அளவில், சட்டசபை வளாகத்தில் நான் வந்து கொண்டிருந்தேன். அப்போது, திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., தபன் சாட்டர்ஜி, என்னை நோக்கி பாய்ந்து வந்து தாக்க முயன்றார்.
மேலும், மற்ற எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் செய்தியாளர்கள் முன்னிலையில், என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆளுங்கட்சி உறுப்பினர்களால் நாங்கள் அச்சுறுத்தப்படுவது இது இரண்டாவது முறை.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டசபை வளாகத்திற்குள் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், சபையின் பாதுகாவலர் என்ற முறையில் நீங்கள் தான் பொறுப்பு. தபன் சாட்டர்ஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடந்து வருவதாக சபாநாயகர் பிமன் பானர்ஜி தெரிவித்தார்.