ADDED : மார் 10, 2025 07:01 AM

பாட்னா: “பீஹார் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பா.ஜ., கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரை ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணிக்குள் இழுக்க முயற்சி நடப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை,” என, அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்துக்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இம்மாநில முதல்வரான நிதிஷ் குமார், அணி மாறுவதில் புகழ் பெற்றவர். தேர்தல் நேரங்களில் அவரது அப்போதைய நிலைபாட்டுக்கு முற்றிலும் எதிரான முடிவுகளை எடுத்து அரசியல் களத்தையே ஆடிப்போக செய்வதில் வல்லவர்.
2015 சட்டசபை தேர்தலின் போது, தன் நீண்ட நாள் அரசியல் எதிரியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று முதல்வர் ஆனார். இரண்டே ஆண்டுகளில் கூட்டணியில் இருந்து வெளியேறி, பா.ஜ., உடன் கைகோர்த்து முதல்வராக தொடர்ந்தார். 2020 சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் சேர்ந்து போட்டியிட்டு முதல்வரானார். இதுவும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தொடர்ந்தது. பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் ஐக்கிய ஜனதா தள கூட்டணியில் ஐக்கியமானார்.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என சூளுரைத்த நிதிஷ், எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். எல்லாம் கூடி வரும் நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் தாவினார். இப்படியே ஒன்பது முறை, பீஹார் முதல்வராக அவர் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள பீஹார் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, நிதிஷ் குமாரை தங்கள் பக்கம் இழுக்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் முயற்சித்து வருவதாகவும், இது தொடர்பாக பேச்சு நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தேஜஸ்வி கூறியதாவது: யார் உங்களிடம் இப்படியெல்லாம் கூறுவது? நாங்கள் ஏன் நிதிஷை அழைக்க வேண்டும்? அப்படி எந்த முயற்சியும் நடக்கவில்லை; வீண் உளறல்கள் வேண்டாம். இதுபோன்ற அழைப்புகளை லாலு அல்லது நான் மட்டுமே முன்வைக்க முடியும். நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.