ADDED : ஆக 01, 2024 01:30 AM

புதுடில்லி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக, முன்னாள் சுகாதாரத்துறை செயலர் ப்ரீத்தி சுதன் நேற்று நியமிக்கப்பட்டார்.
ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உட்பட மத்திய அரசின் அதிகாரிகள் அளவிலான பல பணியிடங்களுக்கு, யு.பி.எஸ்.சி., வாயிலாக தேர்வு நடத்தப்படுகிறது. இதன் தலைவராக மனோஜ் சோனி கடந்தாண்டுமே மாதம் நியமிக்கப்பட்டார்.
பதவிக்காலம் முடிவடைய ஐந்து ஆண்டுகள் உள்ள நிலையில், திடீரென அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, யு.பி.எஸ்.சி.,யின் தலைவராக பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் தந்துள்ளார்.
ப்ரீத்தி சுதன், 1983 ஆந்திரா பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரி.
இவர், மத்திய சுகாதாரச் செயலர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்; 2025 ஏப்ரல் 29 வரை இப்பதவியில் தொடர்வார் என்று ஜனாதிபதி மாளிகையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.