பா.ஜ., - எம்.எல்.சி., வேட்பாளர் பட்டியல் 'மாஜி' எம்.எல்.ஏ., ரகுபதி பட் அதிருப்தி
பா.ஜ., - எம்.எல்.சி., வேட்பாளர் பட்டியல் 'மாஜி' எம்.எல்.ஏ., ரகுபதி பட் அதிருப்தி
ADDED : மே 12, 2024 09:55 PM

பெங்களூரு: கடந்தாண்டு சட்டசபை தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்றாலும், கட்சி வேட்பாளருக்காக பிரசாரம் செய்த முன்னாள் எம்.எல்.ஏ., ரகுபதி பட், எம்.எல்.சி., தேர்தலில் சீட் வழங்கப்படாததால், அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
கர்நாடகா மேலவையில் மூன்று ஆசிரியர், மூன்று பட்டதாரி தொகுதிகளுக்கு ஜூன் 3ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ., வேட்பாளராக அமர்நாத் பாட்டீல், தனஞ்செயா சார்ஜி, தேவகவுடா, ஓய்.ஏ.நாராயணசாமி, நிங்கராஜு ஆகியோரை அறிவித்துள்ளது.
கட்சியின் அறிவிப்புக்கு, உடுப்பி முன்னாள் எம்.எல்.ஏ., ரகுபதி பட் அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:
கர்நாடகா மேலவைக்கான ஆசிரியர், பட்டதாரி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சிக்கமகளூரு ஆசிரியர் தொகுதியை ம.ஜ.த.,வுக்கு கொடுத்துள்ளனர். பட்டதாரி தொகுதியான ஷிவமொகாவுக்கு சீட் வழங்கப்பட்டு உள்ளது.
படித்த, உணர்வுள்ள வாக்காளர்கள் உள்ள உடுப்பி, தட்சிண கன்னடா, குடகை சேர்ந்தவர்களுக்கு பா.ஜ., சீட் தரவில்லை. 40 ஆண்டுகளாக உள்ள பாரம்பரியத்தை பா.ஜ., உடைத்துள்ளது. தற்போதைய நிலையில் பா.ஜ.,வின் கவனம் சிதறியுள்ளது.
கடந்த 1994 முதல் கட்சியின் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்துள்ளேன். மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் எந்த தகவலும் இல்லாமல், வேறொருவருக்கு சீட் வழங்கப்பட்டது. இதை 'டிவி' மூலமே தெரிந்து கொண்டேன்.
ஆனாலும் கட்சி அறிவித்த வேட்பாளர் வெற்றிக்காக உழைத்தேன். அப்போது, எனக்கு பட்டதாரி தொகுதியில் போட்டியிட சீட் வழங்குவதாக மூத்தவர்கள் உறுதியளித்தனர்.
இதையடுத்து, பட்டதாரிகளை, அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளேன். மேலும் லோக்சபா தேர்தலில் ஷிவமொகாவில் 40 நாட்களாக தங்கி, கட்சி வேட்பாளர் வெற்றிக்காக பணியாற்றினேன்.
கட்சியின் நிலைப்பாட்டில் கவனம் சிதறியுள்ளது. ஒவ்வொரு பொதுச் செயலரும், கட்சி தொண்டர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. விவாதிப்போம், உங்கள் ஆலோசனைக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.