தேர்தலை எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் எச்சரிக்கை
தேர்தலை எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் எச்சரிக்கை
ADDED : ஏப் 04, 2024 10:47 PM

பெங்களூரு,- ''லோக்சபா தேர்தலை எளிதாக எடுத்து கொள்ள கூடாது,'' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பெங்களூரு எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் அளித்த பேட்டி:
எனக்கும், சிக்கபல்லாபூர் பா.ஜ., வேட்பாளர் சுதாகருக்கும் இடையில், எந்த பிரச்னையும் இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னிடம் பேசினார்.
மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
கடந்த 45 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். ஒருபோதும் கட்சிக்கு எதிராக செயல்பட்டது இல்லை. தேர்தலில் சீட் எதிர்பார்த்து கிடைக்கா விட்டால், அதிருப்தி இருக்க தான் செய்யும். நான்கு, ஐந்து நாட்களில் சரியாகிவிடும். எனது மகன் அலோக்கிற்கு சீட் கிடைத்து இருந்தால், சுதாகரை நான் தேடி போய் இருப்பேன்.
தேர்தலை எப்போதும் எளிதாக எடுத்து கொள்ள கூடாது. மோடி அலை உள்ளது என்று, வீட்டில் அலட்சியமாக இருக்க கூடாது. இப்போது கடும் வெயில் அடிக்கிறது. வெயிலுக்கு மத்தியில் பிரசாரம் செய்து தான் ஆக வேண்டும்.
அலோக் போட்டியிட்டால் எலஹங்கா தொகுதியில் இருந்து 1.25 லட்சம் ஓட்டுகள், வித்தியாசம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால், இப்போது சுதாகர் போட்டியிடுகிறார்.
அலோக்கிற்கு சீட் கிடைக்காததால், எனது ஆதரவாளர்கள் இன்னும் கோபத்தில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த வேண்டிய, பொறுப்பு என்னிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

