அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங்
அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங்
ADDED : மே 05, 2024 11:59 PM

புதுடில்லி: “அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., ஒருபோதும் மாற்றாது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுதும் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. களைகட்டியுள்ள தேர்தல் பிரசாரத்தில் அரசியல் சாசனம் மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் அரசியல் கட்சியினர் இடையே அனல் பறக்கும் விதமாக உள்ளன.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடும் என காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருகிறது. அதன் முகப்புரையில் உள்ள மதச்சார்பின்மை என்ற வார்த்தையை பா.ஜ., இல்லாமல் செய்துவிடும் என்றும் அக்கட்சி குறை கூறி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை.
காங்கிரஸ் காலத்தில்தான், 80 முறை அரசியலமைப்பு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 'எமர்ஜென்சி' எனப்படும் அவசரநிலையின் போது, அரசியலமைப்பின் முன்னுரையை அக்கட்சியினர் மாற்றினர். பா.ஜ., மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால், அப்படி எதுவும் நடக்காது. ஒருபோதும் அரசியலமைப்பு மாற்றப்படாது. அதேபோல், இட ஒதுக்கீடும் ரத்து செய்யப்படாது.
மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவும், ஓட்டு வங்கி அரசியலுக்காகவும் காங்கிரஸ் பொய் பரப்பி வருகிறது. நம் ராணுவம் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. ராகுலை பாகிஸ்தான் தலைவர் புகழ்ந்து பேசியது கவலை அளிக்கிறது.
நாங்கள் எங்களின் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றுகிறோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்ற வேண்டிய அவசியமில்லை. அங்கிருக்கும் மக்கள் தாங்களாகவே இந்தியாவுடன் சேர விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.