ADDED : செப் 15, 2024 12:31 AM
மூணாறு, : இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் பார்க்க அரசு அனுமதித்த நிலையில், அங்கு வனத்துறை சார்பில் சுற்றுலா படகு சேவை துவங்கியது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து அரசு செப்.2ல் உத்தரவிட்டது.
மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பலத்த பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டது. தற்போது புதன் கிழமை தவிர அனைத்து நாட்களிலும் அணையை பார்க்க அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
துவக்கம்: இந்நிலையில் இடுக்கி அணையில் வனத்துறை சார்பிலான இடுக்கி வன வளர்ச்சி குழு தலைமையில் சுற்றுலா படகு சேவை துவங்கியது. முதல் கட்டமாக 18 இருக்கைகள் கொண்ட படகு இயக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு படகுகள் இயக்கப்பட உள்ளது.
அணைக்கு உட்பட்ட வெள்ளாபாறை படகு குழாமில் இருந்து படகு இயக்கப்படுகிறது. 30 நிமிடம் பயணத்தின்இடையே ஆர்ச் வடிவிலான இடுக்கி அணை, நேர் வடிவிலான செருதோணி அணை, வைசாலி குகை ஆகியவற்றை பார்க்கலாம்.
நேரம்: காலை 9:00 முதல் மாலை 5:00 மணிவரை. கட்டணம்: நபர் ஒன்றுக்கு ரூ.155. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.85.