ADDED : மே 22, 2024 12:52 AM
புனே, மஹாராஷ்டிராவில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்று, இருவர் உயிரிழக்க காரணமான சிறுவனின் தந்தையை போலீசார் நேற்று கைது செய்தனர். சிறுவனை வயது வந்த நபராக கருதவும் போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் சமீபத்தில் சொகுசு கார் மோதி ஐ.டி., ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
விசாரணையில் காரை ஓட்டியது ரியல் எஸ்டேட் தொழிலதிபரின், 17 வயது மகன் வேதாந்த் என்பதும், அவர் குடிபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிந்தது. அவருடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மைனர் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சிறுவனை போதை ஒழிப்பு மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்து மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும் ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமின் வழங்கினார்.
குடிபோதையில் கார் ஓட்டி இருவர் உயிரிழக்க காரணமானவருக்கு, மைனர் என்ற காரணத்தால் உடனடியாக ஜாமின் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் புனே போலீசார் உயர் நீதிமன்றத்தை அணுகி, சிறுவனை வயது வந்தவராக கருத அனுமதிக்கும் படி கோரிக்கை வைத்துஉள்ளனர்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை மற்றும் சிறுவர்களுக்கு மது வழங்கிய மதுபான விடுதியின் உரிமையாளர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து புனே போலீசார் கூறியதாவது:
மது போதையில் சாலை விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை, தன் மகனிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என தெரிந்தும், அவரிடம் காரை வழங்கியுள்ளார். மகன் மது அருந்துவான் என தெரிந்தும், அவனை மதுபான விடுதி செல்ல அனுமதித்துள்ளார். இதன் காரணமாக அவரை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

