ADDED : ஏப் 27, 2024 11:02 PM
சாம்ராஜ் நகர்: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை நொறுக்கிய சாம்ராஜ்நகரின் 146வது ஓட்டுச்சாவடியில் மட்டும் நாளை மறு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.
கர்நாடகாவில், முதல் கட்டமாக, 14 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் லோக்சபா தேர்தல் நடந்தது. இதில், சாம்ராஜ்நகர் லோக்சபா தொகுதியின், ஹனுார் தாலுகாவில், அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து, ஐந்து கிராமங்கள், ஓட்டுப் போடாமல், தேர்தலை புறக்கணித்தனர்.
கிராமத்தினர் போராட்டமும் நடத்தினர். இதையறிந்த தாசில்தார் உட்பட தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று அவர்களை சமாதானப்படுத்தினர்.
ஆனால், அங்கிருந்த இன்டிகநத்தா கிராமத்தின் அரசு தொடக்கப் பள்ளியில் ஓட்டுச்சாவடிக்கு வந்த கிராமத்தினர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், 'விவிபேட்' இயந்திரங்களை கீழே போட்டு நொறுக்கினர். மேஜை, நாற்காலியை சேதப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் கவனத்துக்கு வந்தது. அவர், மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
தற்போது, இன்டிகநத்தா 146வது ஓட்டுச்சாவடிக்கு மறு ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நாளை காலை 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா நேற்று அறிவித்தார்.
இந்த ஓட்டுச்சாவடியில், 279 ஆண்கள், 249 பெண்கள் என மொத்தம் 528 வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

