யாத்கிர்: சுர்பூர் அருகே, பா.ஜ., காங்கிரஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர். கல்வீச்சில் ஒருவர் மண்டை உடைந்தது.
யாத்கிர் சுர்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ராஜா வெங்கடப்ப நாயக், 67. கடந்த பிப்ரவரியில் உடல்நலக்குறைவால், மரணம் அடைந்தார். அந்த தொகுதிக்கு மே 7ம் தேதி, இடைத்தேர்தல் நடக்கும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்தது.
காங்கிரஸ் வேட்பாளராக ராஜா வெங்கடப்ப நாயக் மகன், ராஜா வேணுகோபால் நாயக், பா.ஜ., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., ராஜுகவுடா களம் இறக்கப்பட்டனர்.
கடந்த சில தினங்களாக, சுர்பூர் தொகுதியில் காங்கிரஸ், பா.ஜ., தொண்டர்கள் இடையில், அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, இரு கட்சி தொண்டர்கள் இடையில் ஏற்பட்ட மோதலில், பலர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 68 பேர் மீது வழக்கு பதிவாகி இருந்தது.
இந்நிலையில், நேற்று இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, சுர்பூர் அருகே பத்யாபூர் கிராமத்தில், காங்கிரஸ், பா.ஜ., தொண்டர்கள் மோதி கொண்டனர்.
ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கினர். இதில் பா.ஜ., தொண்டரின் மண்டை உடைந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

