ADDED : ஜூன் 24, 2024 04:45 AM

பெங்களூரு : ''கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, நீண்ட நாட்கள் நீடிக்காது. எப்போது வேண்டுமானாலும் கவிழும்,'' என, மத்திய ரயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, அடுத்த ஆறு மாதங்கள் இருக்குமா, இருக்காதா என்பது எனக்கு தெரியாது. ஆனால், மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு தெரிந்திருக்கும். இந்த அரசு அதிக நாட்கள் நீடிக்காது.
பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் நெருங்குகிறது. இதற்காக பா.ஜ., - ம.ஜ.த., தயாராக வேண்டும். இந்த ஏற்பாடுகள், எப்படி இருக்க வேண்டும் என்றால், காங்கிரஸ் அரசு தானாகவே கவிழும் வகையில் இருக்க வேண்டும். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி, ஆளுங்கட்சி காங்கிரசின் உறக்கத்தை கெடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.