தேர்தல் விதிகள் இடையூறு; பாதியில் நிற்கும் திட்டப்பணிகள்
தேர்தல் விதிகள் இடையூறு; பாதியில் நிற்கும் திட்டப்பணிகள்
ADDED : மே 03, 2024 11:02 PM
பெங்களூரு : லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள், பெங்களூரில் வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
பெங்களூரு நகரை உலகத்தரம் வாய்ந்த நகராக மாற்றுவதாக, ஆட்சிக்கு வரும் அரசுகள் வாக்குறுதிகள் அளித்துள்ளன. சாக்கடைகள், சாலைகள், நடைபாதை மேம்படுத்துவது, குடிநீர், ஏரிகள் சீரமைப்பு, மழைநீர் கால்வாய்கள் சுத்தப்படுத்துவது உட்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் சரியான நேரத்தில் அரசுகள், நிதியை வழங்காததால் பணிகள் வேகம் பிடிக்கவில்லை.
இதற்கிடையில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பணிகள் பாதியில் நின்று உள்ளன. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டப் பணிகளுக்கு, டெண்டர் அழைக்க முடியவில்லை. சாலைப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் நடமாட்டத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வறட்சி நிலவுவதால், குடிநீர் வழங்கும் பணிகளுக்கு தேர்தல் நடத்தை விதிகளால் தொந்தரவு இல்லை என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
ஆனால் தேர்தல் விதிமுறையை காரணம் காண்பித்து, குடிநீர் திட்ட பணிகளை செயல்படுத்தாமல் அதிகாரிகள், காலம் கடத்துவதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள்அவதிப்படுகின்றனர்.
'பெங்களூரில் ஓட்டுப்பதிவு முடிந்தாலும், ஜூன் 4ல் முடிவு வெளியாகும் வரை, விதிமுறை அமலில் இருக்கும். அதன்பின் பணிகள் துரிதப்படுத்தப்படும்' என,அதிகாரிகள் கூறுகின்றனர். நகரில் மெட்ரோ பணிகளை தவிர, வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை.