ADDED : மே 22, 2024 10:30 PM
ராஜகோபால்நகர்: கடைக்காரர்களை மிரட்டி லஞ்சம் வாங்கிய போது, பொதுமக்களால் துரத்தப்பட்ட எஸ்.ஐ., - ஏட்டுவை 'சஸ்பெண்ட்' செய்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரில் ஒரு இடத்தில் கடைக்காரர்களை மிரட்டி, ரோந்து சென்ற போலீசார் லஞ்சம் வாங்கினர். இதை கடைக்கு வந்த சிலர், வீடியோ எடுத்தனர். இதனால் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்து, ஹொய்சாளா வாகனத்தில் தப்பினர்.
வீடியோ எடுத்தவர்கள் அந்த வாகனத்தை விரட்டியதோடு, 'போலீஸ் கள்ளன்.... போலீஸ் கள்ளன்...' என்றும் கூச்சலிட்டனர்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
அந்த வீடியோ, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா கவனத்திற்கும் சென்றது. ஹொய்சாளா வாகனத்தின் பதிவெண்ணை வைத்து விசாரித்த போது, ராஜகோபால்நகர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., ராமலிங்கய்யா, ஏட்டு பிரசன்னகுமார் ஆகியோர், கடைக்காரர்களை மிரட்டி லஞ்சம் வாங்கியது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து, போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று உத்தரவிட்டார். இருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

