கர்நாடக பா.ஜ., இரண்டாக உடையும் மேலிடத்துக்கு ஈஸ்வரப்பா எச்சரிக்கை
கர்நாடக பா.ஜ., இரண்டாக உடையும் மேலிடத்துக்கு ஈஸ்வரப்பா எச்சரிக்கை
ADDED : ஆக 13, 2024 07:33 AM

ஷிவமொகா: ''மேலிட தலைவர்கள் தலையிட்டு, பிரச்னையை சரி செய்யாவிட்டால், கர்நாடகாவில் பா.ஜ., இரண்டாக உடையும்,'' என, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா எச்சரித்தார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் அளித்த பேட்டி: பா.ஜ.,வின் 12 தலைவர்கள், பெலகாவியில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தியதை கேள்விப்பட்டு, அதிர்ச்சி அடைந்தேன். இவர்கள் கட்சிக்காக உழைத்தவர்கள். இவர்கள் என்னென்ன வலியை அனுபவித்தனரோ, அதை பகிரங்கமாக கூறவில்லை. தனியாக பாதயாத்திரை நடத்துவதாக கூறியுள்ளனர்.
'இமேஜ்' பாதிக்கும்
பெலகாவிக்கு பின், பெங்களூரிலும் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தலைவர்கள் பாதயாத்திரை நடத்தினால், கட்சியின் இமேஜ் பாதிக்கும். ஒவ்வொரு தாலுகாவிலும், கட்சி இரண்டாக உடையும். 12 பேர் மட்டுமே கூட்டம் நடத்தினர் என, கட்சி மேலிடம் அலட்சியம் காட்டக் கூடாது.
லோக்சபா தேர்தல் நேரத்தில், விஜயேந்திராவை தலைவராக நியமித்தது, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எடியூரப்பாவின் குடும்பத்தினர் கையில் அதிகாரத்தை கொடுத்ததால், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் பலம் 25லிருந்து 17 ஆக குறைந்தது. மோடி அலையுடன், கட்சி வலுவாக இருந்தபோது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
ஹிந்துத்வா எங்கே?
பிரதமர் நரேந்திர மோடி, எங்களின் விருப்பமான தலைவர். எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி, சித்தேஸ்வர் என, பலர் ஆலோசனை நடத்தி உள்ளனர். எடியூரப்பா குடும்பத்தினரிடம், கட்சியை ஒப்படைப்பதில் பா.ஜ., மேலிடத்துக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? பா.ஜ.,வில் ஹிந்துத்வா போய்விட்டது.
பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ள தலைவர்களை, பா.ஜ., மேலிடம் அழைத்துப் பேச வேண்டும். இதனால் பாதயாத்திரையை தடுக்கலாம். இல்லாவிட்டால் இவர்களுடன் மேலும் சில தலைவர்கள் இணைவர். கட்சி சிதையும். கட்சி பணிகளை செய்யாததால், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை 66 ஆக குறைந்தது.
நான், யாருக்கும் ஆதரவாக பேசவில்லை. எனக்கு கட்சியின் நலனே முக்கியம். கட்சியில் நடக்கும் நிலவரங்களை, மேலிடம் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

