ADDED : செப் 01, 2024 11:24 PM
ஹாசன்: எத்தின ெஹாளே குடிநீர் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் முடிந்து உள்ள நிலையில், வரும் 6ம் தேதி முதல்வர் சித்தராமையா திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல், ராம்நகர், துமகூரு, ஹாசன், சிக்கமகளூரு ஆகிய ஏழு மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2014 ல் 12,912 கோடி ரூபாயில், எத்தின ெஹாளே குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது.
ஹாசனின் சக்லேஸ்பூரில் இருந்து பூமிக்கு அடியில் குழாய் பதித்து, மற்ற மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வது, இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். திட்ட பணிகள் இரண்டு கட்டமாக நடந்து வருகின்றன.
மேற்கண்ட ஏழு மாவட்டங்களில் உள்ள 6,657 கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வது இதன் நோக்கம். தற்போது முதல் கட்ட பணிகள் முடிந்து உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன், துணை முதல்வர் சிவகுமார் சக்லேஸ்பூர் சென்று, குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், நேற்று பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:
கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல், ராம்நகர், துமகூரு, ஹாசன், சிக்கமகளூரு ஆகிய ஏழு மாவட்ட மக்கள் எத்தின ெஹாளே குடிநீர் திட்ட பணிகள் எப்போது முடியும் என்று எதிர்பார்த்து உள்ளனர். தற்போது முதல் கட்ட பணிகள் முடிந்து உள்ளது. இரண்டாம் கட்ட பணிகள் 2027 மார்ச் மாதத்திற்குள் முடியும்.
இந்த திட்டத்திற்காக பல தலைவர்கள், பல கட்சிகள் ஒத்துழைத்து உள்ளனர். கடந்த ஓராண்டாக இத்திட்டத்தை சவாலாக எடுத்து கொண்டேன். இந்த திட்டம் குறித்து பல விமர்சனங்கள் வந்தன. வனத்துறை சார்ந்த சில பிரச்னைகள் இருந்தன. அதற்கு தீர்வு கண்டு உள்ளோம்.
வரும் 6ம் தேதி முதல்வர் சித்தராமையா திட்டத்தை துவக்கி வைக்கிறார். அனைத்து கட்சி தலைவர்கள், விவசாயிகளை துவக்க விழாவிற்கு அழைத்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.