இணையதளத்தை முடக்கி ரூ.1 கோடி 'பிட்காயின்' சுருட்டிய 'ஹேக்கர்' கைது
இணையதளத்தை முடக்கி ரூ.1 கோடி 'பிட்காயின்' சுருட்டிய 'ஹேக்கர்' கைது
ADDED : மே 07, 2024 11:28 PM

பெங்களூரு : தனியார் நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கி, 1 கோடி ரூபாய் மதிப்பிலான, பிட்காயின்களை ஆட்டையை போட்ட, 'பிரபல ஹேக்கர்' ஸ்ரீகிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு குமாரசாமி லே - அவுட் போலீசார், 2020ல் தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சா விற்ற வழக்கில், பெங்களூரு ஜெயநகரை சேர்ந்த பிரபல ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணா என்கிற ஸ்ரீகி, 29, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் அரசின் பல்வேறு துறைகளில் இணையதளங்களை முடக்கி, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியது தெரிய வந்தது. இதுதவிர தனியார் நிறுவன இணையதளத்தை முடக்கி பணத்தை சுருட்டுவதும் தெரிந்தது. மேலும் பிட்காயின் முறைகேட்டிலும் ஈடுபட்டதும் தெரிந்தது.
அவரிடம் இருந்து, 9 கோடி ரூபாய் மதிப்பிலான 31 பிட்காயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கை சி.சி.பி., விசாரித்தது. பிட்காயின் முறைகேட்டில் பா.ஜ., அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டியது. விசாரணையில் இருந்த போதே ஸ்ரீகிருஷ்ணா விடுவிக்கப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் கைது
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பிட்காயின் முறைகேடு பற்றி விசாரிக்க, சிறப்பு விசாரணை குழு அமைத்தது. பிட்காயினை சேதப்படுத்திய சாட்சியங்களை அழிக்க முயன்றதாக, சி.சி.பி., முன்னாள் இன்ஸ்பெக்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.
இந்நிலையில், 2017ல் துமகூரு சைபர் கிரைம் போலீசில், தனியார் நிறுவன மேலாளர் ஹரிஷ் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரில், 'எங்கள் நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கி, எங்களிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பிட்காயின்களை, மர்மநபர்கள் திருடினர்' என்று கூறி இருந்தனர்.
அந்த வழக்கு குறித்தும், சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. தனியார் நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கி, பிட்காயின்களை அபேஸ் செய்தது ஸ்ரீகிருஷ்ணா என்பது தெரிந்தது.
விசாரணைக்கு ஆஜராக அவருக்கு, பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில் பெங்களூரில் ஒரு தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த, ஸ்ரீகிருஷ்ணாவை நேற்று முன்தினம் இரவு, சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.

