ADDED : ஆக 02, 2024 01:37 AM

இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை காடாகக் காட்சியளித்த புதுடில்லியின் துவாரகா, ஆசியாக் கண்டத்திலேயே மிகப்பெரிய துணை நகரமாகத் இன்று திகழ்கிறது. கிட்டத்தட்ட11 லட்சம் பேர் வசிக்கும் துவாரகாவில் தமிழர்களும் கணிசமாக இருக்கின்றனர். தமிழர்கள் இங்கு குடியேறிய பின், உருவானதுதான் ஸ்ரீராமர் கோவில். பெயரில் வைணவத் தலமாக இருந்தாலும், இது சிவ - விஷ்ணு கோவில்.
துவாரகாவில் ஆன்மிகம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி வந்த டில்லி பஜனை சமாஜம் நிர்வாகிகள் ஸ்ரீராமபிரானுக்கு ஒரு கோவில் எழுப்ப திட்டமிட்டனர். அதற்காக டில்லி மேம்பாட்டு ஆணையத்தை அணுகி, 400 சதுர மீட்டர் இடத்தைப் பெற்றனர். இதைத் தொடர்ந்து டில்லி பஜனை சமாஜம் - ஸ்ரீராமர் கோவில் அறக்கட்டளை துவக்கப்பட்டது.
அந்த நேரத்தில், காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், “இந்தக் கோவில் மிகச்சிறப்பாக அமையும்” என ஆசீர்வதித்தார்.
திருப்பணிகள் முடிந்து, 2012ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதிலும் மஹா பெரியவரின் அவதார நாளிலேயே இந்தக் கும்பாபிஷேகமும் நடந்திருப்பது இந்தக் கோவிலுக்கு மற்றுமொரு சிறப்பு.
கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடப்புறமாக ஸ்ரீவித்யா கணபதி அருள்பாலிக்கிறார். பிரதான சன்னிதியில் சீதாப்பிராட்டியார் - லட்சுமணர் - ஆஞ்சநேயர் சமேத ராமபிரான் காட்சியளிக்கிறார், பிரதான சன்னிதிக்கு வலதுபக்கம், காமேஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபெருமான் லிங்க வடிவிலும், இடதுபக்கம் காமேஸ்வரி அம்பாள் அமர்ந்த நிலையிலும் அருள்பாலிக்கின்றனர்.
மேலும், அம்ருத கணபதி மற்றும் சங்கடமோட்ச ஆஞ்சனேயர் தனித்தனி சன்னிதிகள் கொண்டுள்ளனர். இந்த இரண்டு சன்னிதிகளுக்கு இடையில் வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானும், தவக்கோலத்தில் சுவாமி ஐயப்பனும் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர். முருகப்பெருமானின் முன் கைகூப்பி வணங்கிய நிலையில் அருணகிரிநாதர் காட்சியளிக்கிறார். பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு, வைஷ்ணவி, மாகேஷ்வரி ஆகிய கோஷ்ட தேவதைகள் இடம் பெற்றுள்ளனர்.
நவக்கிரக சன்னிதியும் தனியாக அமைந்துள்ளது. நுழைவாயிலின் வலதுபுறம் பக்தர்கள் தொட்டு அபிஷேகம் செய்ய வசதியாக நந்தியுடன் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மேல்தளத்தில், சயன கோலத்தில் ரெங்கநாதரும், அவரது திருவடிகளின் அருகில் தாயார் மகாலட்சுமியும் எழுந்தருளியிருப்பது இந்தக் கோவிலுக்கு மேலும் ஒரு சிறப்பு.
* கொட்டித் தீர்த்த மழை
ரெங்கநாதர் இந்தக் கோவிலுக்கு வந்து சேர்ந்தது தனி வரலாறு. டில்லி விமானப்படை வளாகத்தில் பிரதிஷ்டை செய்ய ரங்கநாதர் சிலை ஒன்றை தமிழகத்தில் இருந்து சிலர் வரவழைத்தனர். ஆனால், பல முயற்சிகள் செய்தும் பிரதிஷ்டை செய்ய அனுமதி கிடைக்கவில்லை. எனவே, துவாரகா ராமர் கோவிலில் ரங்கநாதரை எழுந்தருளச் செய்வது என முடிவு செய்து ஒப்படைத்தனர்.
நீண்ட காலமாக துணியால் சுற்றப்பட்டு இருந்ததால், தூசி படிந்த நிலையில் இருந்த அந்தச் சிலை 4,000 கிலோ எடை கொண்டது. பிரதிஷ்டை செய்துவிட்டு சுத்தம் செய்யலாம் என திட்டமிட்டு, கிரேன் மூலம் மேலே கொண்டு செல்லும்போது திடீரென வானம் கறுத்து இடி மின்னலுடன் ம்ழை கொட்டித் தீர்த்தது.
சற்று நேரத்துக்கெல்லாம் வானம் மீண்டும் இயல்பு நிலை திரும்பியது. அந்தக் காட்சி வருண பகவானே இறங்கி வந்து ரங்கநாதருக்கு அபிஷேகம் செய்ததைப் போல இருந்தது என்கிறார் கோவில் நிர்வாகிகளில் ஒருவரான கணேசன்.
கோவிலின் மற்றொரு நிர்வாகியும், ஐயப்ப பக்தருமான ராமசாமி தலைமையில் ஆண்டுதோறும் சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி, மண்டல காலமான 48 நாட்களும் பஜனைகள் நடத்தி, சரண கோஷத்தால் அந்தப் பகுதியையே கலகலப்பாக்கி விடுகின்றனர்.
சரியாக 12 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் இரண்டாவது கும்பாபிஷேகம் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி மிகச் சிறப்பாக நடந்தது.
இந்த ஆலயத்தை நிர்மாணித்ததில் மறைந்த கர்னல் கிருஷ்ணமுர்த்தி, மீ. விசுவநாதன் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
ராஜு, முரளி, கிருஷ்ணன் உட்பட 9 பேர் கொண்ட அறங்காவலர் குழுவுடன் இணைந்து செயற்குழு மற்றும் நிர்வாகக் குழுவைச் சார்ந்தவர்கள் அர்ப்பணிப்போடு திருப்பணியாற்றி வருகிறார்கள்.
ஹிந்து மதத்தில் உட்பிரிவுகள் பல இருந்தாலும் சைவமும், வைணவமுமே பிரதானமாக இருக்கின்றன. சிதம்பரம், திருநெல்வேலி, திருச்செந்தூர் போன்ற பழமை வாய்ந்த சிவாலயங்களில் வைணவக் கடவுளான பெருமாள் குடிகொண்டிருந்தாலும், பொதுவாக சைவ மற்றும் வைணவ ஆலயங்கள் தனித்தனியாகவே நிர்மாணிக்கப்படுகின்றன. ஆனால், ஹரியும் சிவனும் ஒன்றே என கட்டியம் கூறுவது போல டில்லி துவாரகாவின் ராமர் கோவில் அமைந்துள்ளது.
கே.வி.கே. பெருமாள்,
நிறுவனர் - தலைவர்,
டில்லிக் கம்பன் கழகம்.
கைப்பேசி: 9899448044