தோட்டக்கலை சுற்றுலா திட்டம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தோட்டக்கலை சுற்றுலா திட்டம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : செப் 14, 2024 11:29 PM
பெங்களூரு : சுற்றுலா வாயிலாக பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் தோட்டக்கலை மற்றும் உள்ளூர் தாவர வளங்களை அறிமுகம் செய்யும் நோக்கில், தோட்டக்கலை சுற்றுலா என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குனர் பரசிவ மூர்த்தி, நேற்று அளித்த பேட்டி:
செடிகள் வளர்ப்பது, பராமரிப்பது, கைத்தோட்டம் அமைப்பது, இயற்கை உரம் தயாரிப்பது குறித்து, பொது மக்கள், மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், தோட்டக்கலை சுற்றுலா என்ற பெயரில், திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தோட்டக்கலை மற்றும் சுற்றுலாத்துறைகளின் ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்படும்.
திப்ப கொண்டனஹள்ளியில் சுற்றுலாவை மேம்படுத்த, தகுந்த சூழ்நிலை உள்ளது.
தொட்டசாகரேவில் 100 ஏக்கர் பரப்பளவில், 'பொட்டானிக்கல் கார்டன்' அமைக்கப்படும். இங்கு சிற்றுண்டி விடுதிகள் அமைக்கப்படும்.
இந்த இடத்துக்கு சுற்றுலா செல்லும் வசதி மேற்கொள்ளப்படும். உள்ளூர் தாவரங்கள், பழச்செடிகள், காய்கறிகளின் சிறப்பு தன்மை, தோட்டக்கலை குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
திட்டத்துக்கு அரசிடம் அனுமதி கேட்டு, அரசுக்கு கோரிக்கை அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.