ரயில்வே வாரியத்துக்கு சட்ட அங்கீகாரம்: மசோதா நிறைவேற்றம்
ரயில்வே வாரியத்துக்கு சட்ட அங்கீகாரம்: மசோதா நிறைவேற்றம்
ADDED : மார் 12, 2025 01:33 AM
புதுடில்லி : எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே, ரயில்வே திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது.
கடந்த 190-5ல் அறிமுகம் செய்யப்பட்ட ரயில்வே வாரியச் சட்டத்தை நீக்கி, அதில் உள்ள அம்சங்களை, ரயில்வே சட்டம் - 1989ல் சேர்க்கும் வகையிலான, ரயில்வே திருத்த மசோதா பார்லிமென்டில் கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு லோக்சபா, கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், ராஜ்யசபாவில் இந்த மசோதா, குரல் ஓட்டெடுப்பில் நிறைவேறியது.
இதுகுறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ராஜ்யசபாவில் கூறியதாவது:
ஏற்கனவே உள்ள சட்டங்களை எளிமையாக்கவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு மாநில அரசின் அதிகாரத்தையும் குறைப்பதாக இல்லை. மேலும், ரயில்வேயின் மண்டல பொது மேலாளர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும். இதன் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு அவர்கள் ஒப்புதல் வழங்க முடியும்.
மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
ரயில்வே வாரியம் என்பது ரயில்வே வாரியம் - 1905 சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. தற்போது, அந்த சட்டம் நீக்கப்பட்டு, ரயில்வே சட்டம் - 1989ல் இணைப்பதன் வாயிலாக, ரயில்வே வாரியத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கும்
ரயில்வே சட்டத்துடன் இணைக்கப்படுவதால், ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது, அதற்கான தகுதிகளை நிர்ணயிப்பது, பதவிக்காலம் போன்றவை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன
பயண கட்டண நிர்ணயம், உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவது, சேவைகளின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்டவற்றை கண்காணிக்க தன்னாட்சி அதிகாரம் உள்ள அமைப்பு உருவாக்கப்படும். ரயில்வேயில் சீர்திருத்தம் மேற்கொள்ள பல கமிட்டிகள் இந்தப் பரிந்துரையை அளித்திருந்தன
ரயில்வே மண்டலங்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது. ஒப்புதல்கள் அளிப்பதில், மண்டல அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும். இந்த மசோதாவின் வாயிலாக, நிதி, ரயில்களை இயக்குவது உள்ளிட்டவற்றில் மண்டல அதிகாரிகள் முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்படுகிறது
இதன் வாயிலாக, ரயில்வே பணிகளை வேகப்படுத்துவது, தேவைகளுக்கு ஏற்ப ரயில் சேவைகளை மாற்றி அமைப்பது, உயர்த்துவது போன்றவற்றை அந்தந்த மண்டலங்களில் மேற்கொள்ள முடியும்.