பொது சிவில் சட்ட வரைவு மசோதாவுக்கு ம.பி.,அமைச்சரவை ஒப்புதல்
பொது சிவில் சட்ட வரைவு மசோதாவுக்கு ம.பி.,அமைச்சரவை ஒப்புதல்
ADDED : ஜூலை 19, 2026 08:12 PM
போபால்: பலதார மணத்தை தடை செய்யும், லிவ் – இன் முறையில் வாழ்வதை பதிவு செய்வதை கட்டாயமாக்கும், பொது சிவில் சட்ட வரைவு மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் திருமணம் செய்த தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகள், தத்தெடுக்கப்படும் குழந்தைகள், வாடகைத்தாய் மூலம் பிறக்கும் குழந்தைகள் என அனைவருக்கும் சமமான அளவு சட்ட உரிமை வழங்க பரிந்துரை செய்யும் பொது சிவில் சட்ட வரைவு மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அறிமுகம் செய்ய ம.பி., அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதா பலதார மணத்துக்கு தடை விதிக்கிறது. மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து தரும் முஸ்லிம்களின் முத்தலாக்கை குற்றமாக கருதுகிறது. திருமணம் செய்யாமல் லிவ் – இன் முறையில் சேர்ந்து வாழ்வோர் அதை ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யாவிட்டால் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கவோ அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்கவோ பொது சிவில் சட்ட மசோதா பரிந்துரைக்கிறது.
