-ஆயுட்காலம் முடிந்த வாகன மாசு குறித்து ஆய்வு நடத்தவில்லை: ஆணையம் பதில்
-ஆயுட்காலம் முடிந்த வாகன மாசு குறித்து ஆய்வு நடத்தவில்லை: ஆணையம் பதில்
ADDED : ஆக 08, 2025 10:43 PM
புதுடில்லி:'தேசிய தலைநகர் பிராந்தியத்தில், ஆயுட்காலம் முடிந்த பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்து எந்த ஆய்வும் நடத்தவில்லை' என, காற்று தர மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் அமித் குப்தா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பித்த விண்ணப்பத்தில், '10 ஆண்டுகள் ஆன டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் ஆன பெட்ரோல் வாகனங்கள் இயக்கினால், காற்று மாசு ஏற்படுவதால் அவற்றை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதா?' என கேட்டிருந்தார்.
இதற்கு, மத்திய காற்று தர மேலாண்மை ஆணையம் அளித்துள்ள பதில்:
ஆயுட்காலம் முடிந்த டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு குறித்து, மத்திய காற்று தர மேலாண்மை ஆணையம் எந்த ஆய்வும் நடத்தவில்லை.
இதுதொடர்பாக, வர்த்மான் கவுஷிக் மற்றும் யூனியன் ஆப் இந்தியா வழக்கில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படியும், எம் சி மேத்தா மற்றும் யூனியன் ஆப் இந்தியா வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படியும், ஆயுட்காலம் முடிந்த டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை பொதுவெளியில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயுட்காலம் முடிந்த வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் வழங்கக்கூடாது என்ற உத்தரவை, ஜுலை 1ம் தேதி முதல் டில்லி அரசு செயல்படுத்தியது.
ஆனால், அதே அரசின் வேண்டுகோளை ஏற்று இந்த உத்தரவு அமல்படுத்துவதை அக்டோபர் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஒரே நாளில் வெற்றி பெற முடியாது. அதற்கு, சரியான திட்டமிடல் மற்றும் நடவடிக்கை தேவை.
வாகன மாசுபாடு ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. தேசிய தலைநகர் பிராந்தியத்தின் பெரும்பாலான நகரங்களில் சரியான பொதுப் போக்குவரத்து இல்லை.
தலைநகர் டில்லியிலும் கூட, தேவைப்படும் அளவுக்கு பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்.
மேலும், கட்டுமானம் மற்றும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டில்லியில் 41 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உட்பட 62 லட்சம் ஆயுட்காலம் முடிந்த வாகனங்கள் உள்ளன.
அதேபோல குருகிராம், பரிதாபாத், காஜியாபாத், கவுதம் புத்தா நகர் மற்றும் சோனிபட் ஆகிய இடங்களில், 44 லட்சம் வாகனங்கள் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.