ADDED : ஆக 08, 2025 10:42 PM
புதுடில்லி:“தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டண உயர்வை ஒழுங்குபடுத்த, சட்டசபையில் தாக்கல் செய்துள்ள மசோதா, கல்வி ஒரு வியாபாரம் இல்லை என்பதை வலியுறுத்துகிறது, ”என, முதல்வர் ரேகா குப்தா கூறினார். முதல்வர் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து, முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது:
தலைநகர் டில்லியில், மாணவ - மாணவியரின் பெற்றோருக்கு ஆதரவாக, வெளிப்படையாக அரசு உடன் நிற்பது இதுவே முதன்முறை. முந்தைய ஆம் ஆத்மி அரசு செய்யாததை, பா.ஜ., அரசு செய்துள்ளது. அதனால்தான், ஆம் ஆத்மி இப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.
மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல்நாளான 4ம் தேதி, கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், 'டில்லி பள்ளிக் கல்வி கட்டண நிர்ணயம் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025'-ஐ தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது சட்டசபையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அதன் விதிமுறைகளில் திருத்தங்களை முன்மொழிய எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள அனைத்து தனியார், அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறாத பள்ளிகளின் கட்டணங்களை மூன்று அடுக்கு மதிப்பீடு மற்றும் ஒப்புதல் முறை மூலம் ஒழுங்குபடுத்த இந்த மசோதா வகை செய்கிறது. விதிமுறைகளை மீறும் பள்ளிகளை கண்காணித்து அபராதம் விதிக்க குழுக்கள் அமைக்கப்படும்.
தனியார் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகள், கல்விக் கட்டணத்தை உயர்த்த அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.