ADDED : ஆக 21, 2024 12:17 AM
புதுடில்லி, உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், 60 ரேஷன் கடைகள், 'ஜன் போஷன் கேந்திரா' மையங்களாக மாற்றப்பட்டு, ஊட்டச் சத்துள்ள பொருட்கள் விற்பனை செய்யப்படும் வகையிலான சோதனை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும், 5.38 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு, அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை என, குறிப்பிட்ட சில பொருட்களே மலிவு விலையில் விற்கப்படுகின்றன.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் தினைகள், பருப்பு வகைகள், பால் பொருட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள பொருட்கள் விற்பனை செய்யும் வகையில், சோதனை திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தை பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உணவு அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று துவங்கி வைத்தார்.
உ.பி., குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 60 ரேஷன் கடைகள், 'ஜன் போஷன் கேந்திரா' மையங்களாக மாற்றப்பட்டு, அங்கு பல்வேறு வகை பொருட்கள் விற்கப்பட உள்ளன.
ஒருசில பகுதிகளில், ஒன்பது நாட்கள் இந்த மையங்கள் இயங்கும் என்றும், சில இடங்களில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளை சத்துணவு மையங்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும், இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

