ADDED : ஜூன் 27, 2024 12:30 AM
ஹைதராபாத்: கேரளாவில் இருந்து உத்தர பிரதேசம் சென்ற ரயிலில் கீழ் இருக்கையில் அமர்ந்திருந்தவர் மீது, திடீரென மேல் இருக்கையான 'பெர்த்' கழன்று விழுந்ததில், கழுத்து எலும்பு முறிந்து பயணி உயிரிழந்தார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னனி பகுதியைச் சேர்ந்தவர் அலிகான், 60. இவர் கடந்த 16ம் தேதி, தன் நண்பர்கள் சிலருடன் உ.பி.,யில் உள்ள ஆக்ரா நகருக்கு ஹஸ்ரத் நிஜாமுதீன் மில்லினியம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு செய்யப்பட்ட எஸ் - 6 பெட்டியில் பயணித்தார்.
ரயில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. கீழ் பெர்த்தில் அலிகான் அமர்ந்திருந்தார். திடீரென நடு பெர்த் அறுந்து அவர் மேல் விழுந்தது. இதில், அவரது கழுத்து எலும்பு உடைந்தது.
ரயில்வே போலீசார் மீட்டு ராமகுண்டம் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24ல் அலிகான் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக ரயில்வே செய்தி தொடர்பாளர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
மேல் இருக்கையின் சங்கிலியை சரியாக மாட்டாததால், இருக்கை கழன்று கீழே இருந்த அலிகான் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார். பெர்த்தை ஆய்வு செய்த போது அது சேதமடையவில்லை என தெரிய வந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.