முதல்வரை சிக்க வைக்க பிரதமர் சதி: எம்.பி.பாட்டீல் சாடல்
முதல்வரை சிக்க வைக்க பிரதமர் சதி: எம்.பி.பாட்டீல் சாடல்
ADDED : ஆக 03, 2024 11:25 PM

பெங்களூரு: ''மூடா முறைகேட்டில், முதல்வர் சித்தராமையாவை சிக்கவைக்க பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முயற்சிக்கின்றனர்,'' என, மாநில கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் குற்றஞ்சாட்டினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவுக்கு மானியம் வழங்குவதில் மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாரபட்சம் பார்க்கிறது.
உச்சநீதிமன்ற கதவைத் தட்டி, மாநிலத்துக்குத் தேவையான மானியத்தை பெற்றோம். வரிகளில் எங்களுக்கு உரிய பங்கு வழங்கப்படவில்லை.
மத்திய அரசின் திட்டங்கள், மாநிலத்துக்கு சென்றடையவில்லை. மத்திய பட்ஜெட்டிலும் கூட, மாநிலத்துக்கு ஒரு பைசா வழங்கப்படவில்லை.
பீஹார், ஆந்திரா மாநிலங்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்பட்டு உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததை சகித்துக் கொள்ள முடியாமல், ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.,வினர் முயற்சிக்கின்றனர். இதனால் 'மூடா' முறைகேட்டில், முதல்வர் சித்தராமையாவை சிக்க வைக்க, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சிக்கின்றனர்.
'மூடா'வினால் முதல்வர் சித்தராமையா குடும்பத்தினர் நிலத்தை இழந்தனர். அதற்கு நிவாரணமாக, வேறு இடத்தில் அவருக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டது.
ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா, முன்னாள் எம்.எல்.ஏ., சாரா.மகேஷ், முன்னாள் அமைச்சர் ராம்தாஸ் ஆகியோருக்கும் மாற்று மனை வழங்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் பா.ஜ., ஆட்சியில் நடந்தது.
முதல்வருக்கு எதிராக பெரிய சக்திகள் இயங்குகின்றன. கவர்னரை பயன்படுத்தி, சித்தராமையாவுக்கு எதிராக நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கவர்னரை பயன்படுத்தி, ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.,வினர் 'வியூகம்' வகுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.