பிரஜ்வல் பங்களிப்பு ஜீரோ காங்., - எம்.எல்.ஏ., கடுப்பு
பிரஜ்வல் பங்களிப்பு ஜீரோ காங்., - எம்.எல்.ஏ., கடுப்பு
ADDED : ஏப் 07, 2024 05:44 AM

சிக்கமகளூரு : சிக்கமகளூரு கடூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆனந்த் அளித்த பேட்டி:
சிக்கமகளூரு லோக்சபா தொகுதியில் இருந்தவரை, கடூர் சட்டசபை தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் நடந்தன. ஆனால் ஹாசன் லோக்சபா தொகுதியில், கடூர் தொகுதியை இணைத்த பின்னர், ஒரு வளர்ச்சிப் பணி கூட நடக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் கடூர் தொகுதிக்கு, ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா பங்களிப்பு ஜீரோ.
கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு எம்.பி., ஆனார். அதற்கு அவர் நன்றி சொல்லவில்லை. இப்போது பா.ஜ., கூட்டணியில் போட்டியிடுகிறார். கூட்டணி சார்பாக போட்டியிடாமல், தனித்து போட்டியிட்டால் பிரஜ்வல் டிபாசிட் வாங்க மாட்டார்.
பிரஜ்வலுக்கு பதிலாக வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நினைத்தார். ஆனால் மகனுக்காக வக்காலத்து வாங்கி, சீட் வாங்கிக் கொடுத்துள்ளார் ரேவண்ணா.
ம.ஜ.த.,வின் மூத்த அரசியல்வாதியான தத்தா, பா.ஜ., சால்வை அணிவார் என்று, யாரும் எதிர்பார்க்கவில்லை. மதச்சார்பற்ற நிலைப்பாடு கொண்ட தேவகவுடா குடும்பம், அரசியலுக்காக மதச்சார்பற்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இது அந்த கட்சியின் அழிவுக்கான அறிகுறி.
ஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேலுக்கு, மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. பிரஜ்வல் மீதான மக்கள் அதிருப்தியால், ஸ்ரேயஷ் படேல் வெற்றி உறுதி. அரசின் வாக்குறுதித் திட்டங்கள் பற்றி குறை கூறும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதி மக்களிடம் சென்று, வாக்குறுதித் திட்டங்கள் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.

