ADDED : செப் 12, 2024 05:50 AM

மல்லேஸ்வரம்: ''வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பதை, வனத்துறை ஊழியர்களின் கடமை என்று கூறி, நாம் பொறுப்பை தட்டி கழிக்கிறோம். இயற்கையை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு,'' என முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தினார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வனத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று தேசிய வன தியாகிகள் தின நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் சித்தராமையா, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, வன தியாகிகள் நினைவு சின்னத்துக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். வன விலங்குகள் தாக்கி இறந்தவர்களுக்கு, 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
பின், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
மாநிலத்தில் போதிய அளவுக்கு வனப்பகுதி இல்லை. எனவே காடு வளர்ப்பு அதிகரிக்க வேண்டும்.
வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பதை, வனத்துறை ஊழியர்களின் கடமை என்று கூறி, நாம் பொறுப்பை தட்டி கழிக்கிறோம்.
இயற்கையை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு. கர்நாடகாவில் அதிக எண்ணிக்கையில், யானைகள், புலிகள் இருப்பது மகிழ்ச்சி. ஆனால், மனிதர்கள், விலங்குகள் தாக்குதல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். வன விலங்குகளால் தாக்குதலுக்கு உட்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண நிதி, 30 லட்சம் ரூபாயில் இருந்து, 50 லட்சம் ரூபயாக உயர்த்தப்பட்டுஉள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.