ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு 2 பயங்கரவாதிகள் சிறையில் அடைப்பு
ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு 2 பயங்கரவாதிகள் சிறையில் அடைப்பு
ADDED : ஏப் 30, 2024 07:50 AM
பெங்களூரு: 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான இரண்டு பயங்கரவாதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெங்களூரு, மாரத்தஹள்ளி அருகே புரூக்பீல்டில் உள்ள, 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில் மார்ச் 1ம் தேதி மதியம் குண்டு வெடித்தது. இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்கிறது. குண்டுவெடிப்பு நடந்து 40 நாட்களுக்கு பின்னர், மேற்கு வங்கத்தில் வைத்து பயங்கரவாதிகள் அப்துல் மதீன் அகமது தாஹா, முஸாவீர் ஹுசைன் சாஜிப் ஆகியோரை, என்.ஐ.ஏ., கைது செய்தது.
இருவரும் பெங்களூரு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இருவரையும் காவலில் எடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்தனர். ஒயிட்பீல்டில் உள்ள ஐ.டி., நிறுவனங்களை குறிவைத்து, குண்டுவெடிப்பு நடத்தத் திட்டமிட்டது.
அது முடியாமல் போனதால், ஐ.டி., ஊழியர்கள் அதிகமாக வரும், 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில் குண்டுவைத்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து சில தகவல்களும் பெறப்பட்டன.
இருவரின் என்.ஐ.ஏ., காவல் நேற்றுடன் முடிந்தது. இதனால் இருவரும் என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேற்கொண்டு இருவரையும் காவலில் எடுத்து, விசாரிக்க அனுமதி கேட்கவில்லை.
இதையடுத்து இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி இருவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

