ADDED : மார் 02, 2025 06:29 AM

பேட்ராயனபுரா: வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையில், தொழிற்சாலை பாதுகாவலர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு பேட்ராயனபுரா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆயத்த ஆடை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பாதுகாவலராக பணியாற்றியவர் கணேஷ் பகதுார் ரவால், 30.
இவர் பணியின்போது மிகவும் கடுமையாக நடந்து கொள்வாராம். இது, அங்கு பணிபுரியும் பலருக்கும் பிடிக்கவில்லை.
கடந்த வியாழக்கிழமை, அந்த தொழிற்சாலைக்கு உணவு வழங்குவதற்காக, டெலிவரி பாய் ஒருவர் வந்துள்ளார்.
அவர் தன் பைக்கை நிறுத்துவதற்கு இடத்தை தேடினார். பைக்கை நிறுத்துவது தொடர்பாக பாதுகாவலருக்கும், டெலிவரி பாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்துடன் டெலிவரி பாய், அங்கிருந்து சென்றுள்ளார்.
நேற்று மாலையும் அதே தொழிற்சாலைக்கு மீண்டும் டெலிவரி பாய் வந்துள்ளார். பணி முடிந்து தொழிற்சாலையில் இருந்து பணியாளர்கள் வெளியே செல்லும் வரை அவர் காத்திருந்து உள்ளார். அனைவரும் சென்ற பின், தனியாக இருந்த பாதுகாவலர் கணேஷை தாக்கி, அவர் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றார்.
அவரை பார்த்த சிலர், மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பேட்ராயனபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.