ADDED : ஜூன் 20, 2024 06:06 AM

விஜயநகரா மாவட்டம் ஹம்பி - கமலாபூர் செல்லும் வழியில் கட்டிராம்புராவில் அமைந்துள்ளது, 'அக்கா - தங்கை பாறை'. இயற்கையாகவே இந்த பாறை அமைந்துள்ளது.
இந்த பாறை அமைப்பு, ஹம்பியின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. ஹம்பிக்கு செல்லும் சுற்றுலா பயணியர், இந்த பாறையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். இரண்டு பாறைகளும் ஒன்றோடு ஒன்று மோதி நிற்பதால், ஒரு பெரிய வளைவை உருவாக்கி உள்ளன. இப்பகுதியை சகோதரி பாறை என்றும்; சகோதரிகளின் மலை என்றும், 'பொறாமை கொண்ட சகோதரிகள்' என்றும் அழைக்கின்றனர்.
ஹம்பியில் உள்ள ஒவ்வொரு கல்லும் தனக்கான கதையை வைத்துள்ளன. அதுபோன்று 'அக்கா தங்கை பாறை'க்கும் கதை சொல்லப்படுகிறது. ஹம்பி நகரம் செழிப்புடன் இருந்த காலகட்டம். அப்போது அக்கா, தங்கை இருவரும் இந்நகருக்கு வந்துள்ளனர். நகரின் அழகை கண்டு மயங்கி, பொறாமை அடைந்து, நகரை தவறாக பேசினர்.
நகரை ஏளனம் செய்த சகோதரிகளின் எண்ணம், ஊரை காக்கும் தெய்வத்துக்கு தெரிந்தது. இதனால் கோபமடைந்த தெய்வம், இருவரையும் பாறையாக மாறுமாறு சபித்ததால், கல்லாக மாறியதாக கூறப்படுகிறது. அன்றிலிருந்து இருவரும் ஹம்பி சாலையில் இரண்டு பாறைகளாக நின்று கொண்டிருக்கின்றனர்.
பல ஆண்டுகளாக, வானிலையின் சோதனைகளை தாங்கிக் கொண்டிருக்கின்றன. இப்போதும் பலமான காவலாளிகள் போன்று காட்சியளிக்கின்றன. ஆண்டுதோறும் ஹம்பி திருவிழாவின் போது ஏற்பாடு செய்யப்படும் பாறை ஏறுதல், ரோப் லிங்க் நடவடிக்கைள் போன்ற சாகச விளையாட்டுக்கான இடமாகவும் இந்த பாறைகள் உள்ளன.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் ஹம்பிக்கு செல்ல விரும்புவோர், பல்லாரி விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ் மூலம், 64 கி.மீ., தொலைவில் உள்ள இந்த பாறைக்கு செல்லலாம்.
அதுபோன்று ரயிலில் செல்பவர்கள், ஹொஸ்பேட் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ், டாக்சி மூலம் அக்கா தங்கை பாறையை காண செல்லலாம்
- நமது நிருபர் -.