ADDED : மார் 31, 2024 11:14 PM

பெங்களூரு: 'பெண்கள் வீட்டில் சமையல் செய்ய மட்டுமே லாயக்கு' என கூறி சர்ச்சைக்கு காரணமான மூத்த தலைவர் சிவசங்கரப்பாவை, மாநில காங்., தலைவர் சிவகுமார் கண்டித்துள்ளார்.
காங்., மூத்த தலைவர் சிவசங்கரப்பாவின் மருமகள் பிரபா மல்லிகார்ஜுன், தாவணகெரே லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சிவசங்கரப்பா, தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன் பிரசாரம் செய்த அவர், பா.ஜ., வேட்பாளர் காயத்ரியை விமர்சிக்கும் போது, 'பெண்கள் வீட்டில் சமையல் செய்ய மட்டுமே லாயக்கு. மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் நின்று பேசவும், அவர்களால் முடியாது' என கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பலரும் இவரை கண்டித்தனர். தன் மருமகளும் பெண் என்பதை மறந்து, எதிரணி வேட்பாளரை தரக்குறையாக பேசியது சரியல்ல என, சாடினர்.
பா.ஜ., வேட்பாளர் காயத்ரி சித்தேஸ்வர், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சைனா நெஹ்வால் உட்பட, பலரும் பதிலடி கொடுத்தனர். இதற்கிடையில், மாநில காங்., தலைவர் சிவகுமாரும் இதை கண்டித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
பெண்கள் குடும்பத்தின் கண்கள். இவர்கள் வீட்டில் சமையல் செய்ய மட்டுமே லாயக்கு என, மூத்த தலைவர் சிவசங்கரப்பா விமர்சித்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அவருக்கு வயதாகி விட்டது. ஏதோ ஒரு மன கணக்கில், இதுபோன்று பேசியுள்ளார். காங்கிரஸ் பெண்களை மதிக்கிறது. இம்முறை லோக்சபா தேர்தலில், ஆறு பெண்களுக்கு கட்சி சீட் வழங்கியுள்ளது.
வருங்காலத்தை மனதில் கொண்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பளித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

