ADDED : பிப் 25, 2025 11:56 PM

பெங்களூரு; ''கர்நாடகாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. அடுத்த ஐந்து நாட்களில் சில இடங்களில் வெப்ப நிலை நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்,'' என, வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து, வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகாவில் வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் 35 டிகிரி செல்சியஸ் தாண்டியுள்ளது. வரும் நாட்களில், வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும்.
கடலோர மாவட்டங்கள், வட மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களில் வெப்ப நிலை ஐந்து டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம். தென் மாவட்டங்களில் இரண்டு டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது 45 முதல் 50 டிகிரி வரை அதிகரிக்க கூடும். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வது நல்லது. வெயில் அதிகம் இருக்கும் போது, வெளியே செல்வதை தவிர்ப்பது அவசியம். பழ ரசங்கள், இளநீர் அருந்துங்கள். ஒருவேளை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், குடை கொண்டு செல்லுங்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.