ADDED : பிப் 25, 2025 10:39 PM

ராய்ச்சூர்: கிராம மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.
ராய்ச்சூர், மாலியாபாத் கிராமத்தில் உள்ள ஆடு, மாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. ஏதோ விலங்கு அடித்து கொன்றதாக கருதப்பட்டது. இதனால், பலரும் அச்சம் அடைந்தனர். அப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதை அப்பகுதியினர் பார்த்து உள்ளனர்.
இதன் மூலம் விலங்குகளை கொன்றது, சிறுத்தை தான் என தெரியவந்தது. இந்த சிறுத்தை, மாலை வேளையில் சுற்றி வருவதை வழக்கமாக வைத்திருந்தது. இதனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு அஞ்சினர்.
இது பற்றி கிராம மக்கள், வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையை ட்ரோன் மூலம் தேடும் பணியை துவக்கினர். பல பகுதிகளில் கூண்டுகளை வைத்தனர். ஆனால், சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதை அறிந்த வனத்துறை ஊழியர்கள், சிறுத்தையை டிராக்டரில் ஏற்றி சென்றனர். அப்போது, சிறுத்தை மிகவும் ஆக்ரோஷமாக உறுமியது. 4 வயதுள்ள ஆண் சிறுத்தையை, கமலாப்பூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.
சிறுத்தை பிடிபட்டதால், கிராம மக்கள் பீதி விலகி, நிம்மதி அடைந்தனர்.

